ஒன்றின்மேல் பற்று

மூடிய கண்களுக்குள்
விழித்துக் கொண்ட ஒரு யோசனை
பூனையை குருடாக்கியது
விட்டத்தின் மீதும் பரண்மீதும்
விட்டேற்றியாக அலைந்த பூனையை
திடீரென குறுக்கிட்ட ஒரு எலி
பதுங்க வைத்துவிட
கண்டபடிக்கும் வியூகம்
அமைக்க வேண்டியதாகிவிட்டது
எலியின் சேட்டை அதிகமானாலும்
மிகவும் பிடித்தமானதாகியது
பூனைக்கு
வாலைக்கூட ஆட்டாமல்
கண்களை முழுசாய் திறக்காமல்
பாசாங்கை தொடர
வேண்டியதாகிவிட்டது
சிறுகுடலை பெருங்குடல்
தின்னும் பசியிலும்
நடிக்க வேண்டியதாயிற்று
இரை விழுங்கிய மதப்புடன்
சுருண்டு கிடக்கும்
மலைப்பாம்பைப் போல
கும்பலாய் விளையாடும்
எலிக்கூட்டத்தில்
ஏதேனும் ஒன்றை
வேட்டையாடும் யோசனையும்
மறந்துபோய்விட
பூனையை
நடைப்பிணமாக்கிய பெருமை
அந்த எலிக்கு வந்தது
இதுபோல
நிறையப் பூனைகளை
வாலைச் சுருட்ட வைத்திருக்கின்றது
என்பதை
இந்தப் பூனை அறிய
வாய்ப்பில்லை !