மூடு மந்திரம் 5(தொடர் கதை)
மயிலண்ணே, ஆபீஸ்ல கூப்டறாங்க.... சரவணம்பட்டில ஒரு கட்டடத்துலருந்து அஞ்சாறு பேரு விழுந்துட்டாங்களாம்...... வரச் சொல்றாங்க......அலறினான் பியூன்...... வாய்க்கிட்ட கொண்டு சென்ற சாப்பாட்டை கசக்கி வீசினான்......ச்சே.... கருமம் புடிச்ச பொழப்புடா...... நிம்மதியா ஒரு நேரம் சோறு திங்க விடறானுங்களா......
பாதுகாப்பில்லாம கட்டடத்துல ஏத்திருப்பானுங்க...... முதலாளி முதலைங்க..... என்று புலம்பிக் கொண்டே டிபன் பாக்ஸ்சை மூடி வைத்து விட்டு ஓடினான் ஆபீஸ் நோக்கி....
கசகசவென கூட்டம்..... வழி விடுங்க. வழி விடுங்கப்பா..... கூட்டம் போடாதீங்க..... ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்க......
ஆங்காங்கே சிதறி கலந்திருந்தவர்கள் அவரவர்க்கு முடிந்த வரையில் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார்கள்..... மொத்தம் அஞ்சு பேர் நாலாவது மாடில இருந்து சாரம் சரிஞ்சு விழுந்துட்டாங்க.....
மூன்று பேரை முன்னால் சென்ற ஆம்புலன்ஸ் ஏற்றிக் கொண்டு செல்ல, மற்ற இருவரையும் மயில்சாமி ஒட்டி வந்த ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.... அந்த இருவரில் ஒன்று பெண்....
மலங்க மலங்க விழித்தபடி பெருமூச்சு விட்டபடியே கிடந்தாள் ..... கண்கள் ஒரு முழு வாழ்க்கைக்கான பயத்தை சுமந்து கொண்டிருந்தது.....
பாக்க பாக்க அப்பிடியே விழுந்துட்டானுங்கப்பா.....
ஆமாமா, எல்லாருமே பீகார்கார்னுங்க தான்.....
பாவம், பஞ்சம் பொழைக்க வந்த இடத்துல இப்படி ஆயிடுச்சே....
கூட்டமாய், தனி தனியாய் பயத்தையும், பரிதாபத்தையும் ஒருசேர பருகிக் கொண்டிருந்தார்கள் அங்கே குழுமியிருந்தவர்கள் .....
ஆம்புலஸ் சைரனை கத்தியபடி சாலையை கொத்தியது...
வேகம் வேகம்.... வேகம்...........
மயில்சாமியின் கண்களில் உள்ளே இருந்த இருவரின் உயிர்கள் மட்டுமே தெரிந்தன....
எப்படியாவது பொழைக்க வைச்சிடனும்...... மனசே.... திடமா இரு....வண்டியில் ஏற்றும் போது, அடிபட்ட அந்த பெண் பார்த்த பார்வையில் தெரிந்தது வெறும் பார்வை அல்ல.... அது கெஞ்சல், சக மனிதனிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை.....சக உயிரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை....இனி ஒரு போக்கிடம் இல்லை, உன்னையன்றி வேறு வழி இல்லை மனிதனே...... இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திட வேண்டும்.... எனக்கான கடமைகள் இன்னும் இருக்கின்றன தோழா....இந்த உலகம் எனக்காக இன்னும் கொஞ்சம் சுற்றிட வேண்டும்.....கை கொடு நண்பனே..... எனக்கு மரணம் பயமாய் இருக்கிறது....என்னால் என் உடம்பை அசைக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் வேகமாய் போ......என் உயிர் வெளியேற பார்த்துக் கொண்டிருக்கிறது.....
அவளின் கண்கள் மெல்ல மூடியது.....
மயில்சாமியின் முகத்தில் ஒரு தெளிவு மலரத் தொடங்கியது....ஆஸ்பத்திரிக்குள் ஆம்புலஸ் வந்து விட்டது... ஸ்ட்ரக்சர் வந்தது..... அவசர அவசரமாக இறக்கி இடம் மாற்றப் பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்குள் நகர்த்தப் பட்டார்கள்....
மூடு மந்திரம்...... தொடரும்......