!!!===(((காதலிக்கோர் தாலாட்டு)))===!!!

கொத்து மலரெடுத்து
கூந்தலிலே தான் தொடுத்து
முத்துச் சரமெடுத்து
பூங்கழுத்தில் பூட்டிவிட்டு
வீதியுலா போகும் நாளும்
விரைவில் வரும் கண்ணுறங்கு...

வான வில்லெடுத்து
வண்ண ஆடைதைத்து
ஆடையிலே வைரங்களை
அழகாகத் தான் பதித்து
அங்கத்திலே அணிந்திடுவோன்
அஞ்சுகமே கண்ணுறங்கு...

மூங்கில் மரமெடுத்து
புல்லாங்குழல் செதுக்கி
கானக் குயிலழைத்து
கச்சேரி நானிசைப்பேன்
கன்னங் கருத்தவளே
கண்மணியே கண்ணுறங்கு...

சொல்லில் சொல்லெடுத்து
சொல்லிசையில் சுரமெடுத்து
தென்றலிலே தொட்டில்கட்டி
தாலாட்டு நான் படிப்பேன்
தெள்ளமுதே தேன்கனியே
தெய்வமணி கண்ணுறங்கு...

வன்னி நிழலெடுத்து
விண்ணகத்தில் வீடுசெய்து
பருத்தி நிழலெடுத்து
பாவையுனை போர்த்திடுவேன்
பச்ச பசுங்கிளியே
பஞ்சவர்ணம் கண்ணுறங்கு...

வட்ட நிலவெடுத்து
நெற்றியிலே திலகமிட்டு
மஞ்சள் கயிரெடுத்து
மாங்கல்யம் தான் யிடுவேன்
மாசியிலே மலர்ந்தவளே
மாமன்மகளே கண்ணுறங்கு...

-----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Jun-13, 3:32 pm)
பார்வை : 185

மேலே