இன்றுதான் நான் பிறந்தேனா...?-கலைஞர்
என் உயிரிலும் மேலானா
என் அன்பு உடன்பிறப்புகளே!
இன்றுதான் நான் பிறந்தேன் என்று
தெருவெங்கும் பதாகை.....
ஆலயமே...அறிவாலயமே! என்று
இன்றுதான் நான் பிறந்தேன் என்று
உமக்குத் தெரியுமா..?-என்
உயிரிலும் மேலான உடன்பிறப்பே!
என்று தமிழன் பிறந்தானோ
அன்றே நான் பிறந்துவிட்டேன்
என்று தமிழ் தோன்றியதோ
அன்றே நான் தோன்றிவிட்டேன்
திருக்குறளை தேடிப்பாருங்கள்
திருக்குவளை அதில் இருக்கும்
எப்படிப் பேசுவது என்று....
சொல்லுக சொல்லில் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து
அன்று அய்யன் வள்ளுவர் சொன்னதும்
அடியேனின் பேசும் கலை அறிந்து.
அதனால் தான் அவருக்கும்
ஆழ்கடலில் ஒரு சிலை வைத்தேன்
என்று அரசியல் தோன்றியதோ
அன்றே நான் அவதரித்து விட்டேன்
அந்தப் பராசக்தியைக் கேளுங்கள்
அன்று சினிமாவில் நான்தான்
அரசியலைப் புகுத்தியவன்....
(அதுவே இன்று வினையாக
அது வேறு கதை..
ஆளைவிடுங்கப்பா)
என்று பகுத்தறிவு உதித்ததோ
அன்றே நானும் உதித்துவிட்டேன்
(தலைவரே!
பெரிய பெரிய ஊடகங்கள்
பேட்டிக்கான வந்திருக்காக...
வரிசையில் தொண்டர்கள்
வாழ்த்திட நிற்காக.....
போயும் போயும் நீங்க
குட்டி எழுத்தாளருக்கெல்லாம்
பேட்டி கொடுக்கலாமா....?)
தலைவர் அய்யா....
இந்தத் தொண்ணூறு வயதிலும்
தளராத உமது தொண்டுக்கு...
என்றும் இளமையோ இளமை
இன்றுதான் நீவீர் பிறந்ததுபோல்...
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்....
(அய்யோ...
விழித்துப்பார்த்தால்...
அம்மா..?
என் அம்மாதான்
கையில் விளக்குமாரோடு...
"எல..சோக்காலிப்பயலே
இன்னும் எத்தன நாளைக்குத்தான்
இப்படி தூக்கத்தில உளறுவ...?")