அப்பாவை மாமாவாக்கும் பணம் தேவைதானா?

திருமணம் முடித்த மூன்றாவது மாதம்
பொருள் தேடி வெளிநாடு பயணம்
நான் தகப்பனாக போகிறேன்
என்றதும் கூட தொலைபேசியின்
வாயால் தான் அறிய முடிந்தது…
மற்றொருநாள் தொலைபேசி அலறல்
பெண் பிள்ளைக்கு தகப்பனானேன்
என்ற செய்தி தாங்கி வந்தபோது
ஊருக்கு கிளம்பும் முடிவு
ஒத்திவைக்கப்பட்டது…!
இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டும் என்பதற்காய்….
என் மகளின் ஒவ்வொரு அசைவும்
எனக்கு தொலைபேசியிலேயே விளக்கப்படும்
என் மனைவியால்
நான் ‘புகைப்பட அப்பா’ என் மகளுக்கு
எப்பொழுதேனும் திருமண வீடியோவில் ….
அவளின் விருப்பம் எல்லாம்
நிறைவேற்று …
அவளுக்காகத்தானே எல்லாம்
வாய்மொழி உத்தரவு என் மனைவிக்கு!!
ஐந்து வருடங்கள் உருண்டோடி
விடுப்பில் பயணம் ஊருக்கு….
கூடு திரும்பும்
குயிலின் மகிழ்ச்சி….
எண்ணற்ற மாற்றம்
மண் சாலையெல்லாம்
தார் சாலையாய்
செல் போன் கோபுரங்கள்
டிஷ் ஆண்டனா குடைகள்
திறந்த வீட்டில் நுழையும்
என் ஓசை கேட்டு
என் மகள்
“அம்மா யாரோ ஒரு மாமா வந்திருக்காங்க…..”
இடியென இறங்கிற்று என்னுள்
அப்பாவை மாமாவென அழைத்தது அவள் குற்றமில்லை
அப்பாவென அடையாளம் கற்பிக்காதது என் மனைவி குற்றமில்லை
பொருள் தேட அயல்நாடு சென்றது என் குற்றமில்லை
எது, யார், ஏன்? ஏதும் அறியா நிலையில்
என் பாஸ்போர்ட் விசாவை குப்பையில்
எறிந்து விட்டு உள் நுழைந்தேன்…..!!!!
- ஜெய்குமார்

எழுதியவர் : ஜெய்குமார் (5-Jun-13, 6:29 pm)
பார்வை : 84

மேலே