குப்பை தொட்டி

உடைக்கபடுகிறது
எங்கள் முதுகெலும்பு
ஏகாதிபத்திய வளர்ப்பு நாய்கள்
எச்சி ருசிக்க....

துர்நாற்றம் வீசும்
தெரு கழிவுகளை
அள்ளி போக
வக்கில்லாத அரசு
வக்கணையாக பேசுகிறது
"அணுகழிவுகளை பாதுகாப்போம்"

நதிகளில்
சாக்காடை கலப்பு...
ஏரி குளமெல்லாம்
அரசு வளாகம்.....
மழைநீர் சேகரிக்கும்
திட்டமில்லை.....
தண்ணீர் தட்டுபாடு
உடனே தனியார்மயம்
இனி
பன்னாட்டு நிறுவனம்
பருக கொடுக்கும்
மூத்திரம்தான்
குடிநீர் நமக்கு.....

சந்தேகத்தின் அடிப்படையில்
கைதான என் அப்பா
காயப்பட்டு துடிக்கிறார்
காவல் நிலைய வாசலில்..

கோடி கோடியாக
ஊழல் செய்தவனுக்கு
என்ன மரியாதை....?
எத்தனை சலுகைகள்...?
எத்தனை உபசரிப்பு...?

சட்டத்தின் முன் எல்லோரும்
சமம் என்பதில்
எங்களுக்கு துளியும்
சம்மதமில்லை.

கனிமவளம் என்று சொல்லி காட்டை அழிக்கிறது உன் ராணுவம்
எதிர்த்து கேள்வி கேட்டால்
எழவெடுத்த உன் சட்டத்தில்
நான் பயங்கரவாதி...

சமவெளிக்கு பழகாத
பழங்குடிகளை
பலவந்தமாக இழுத்து வந்து
மது புட்டியோடு வரும்
சுற்றுலா பயணிகளை
அனுப்புகிறது
வனத்துறை
பல்லுயிரியம் பாதுகாப்பு கருதி..

சந்தனம் தேக்கு நிறைத்து
விருந்தினர் பங்களா வளர்கிறது
காப்பு காடுகளில்
எங்கள் மூதாதையர்
மூங்கில் வீடுகளை
பிய்த்தெறிந்து....

தன் வயிறு வற்றியபோதும்
மார்பை பிழிந்து
என் வாயில்
பாலை சுரந்த
உழவன் உயிர் மாய்த்து கொள்கிறான்
உனக்கு
தொப்பை கொழுத்த
தொழிலதிபதி
வயிறு வெடித்திடுமென்ற
வருத்தம்.

தொழிற்சாலை கட்டிடம் கட்ட
எங்கள் நிலம் புகுந்து
விரட்டியடிக்கிறது
பாதுகாப்பு பணி...
சீன ஊடுருவலை
அத்துமீறல் என
கத்துகிறாய்....
என்னடா நியாம் ?

ஒரு வெள்ளைகார
பல்பொருள் அங்காடி மாளிகை
திறப்பு விழா....
சாலையோரம் கடை விரிக்கும்
என் சகோதரனை அடித்து நொறுக்கிறாய் ?
யாருக்குடா சுதந்திரம்....

எங்கள் உடலெங்கும்
லத்தி ஓவியம்
வரி வரியா...

எங்கள் முதுகுத்தோல்
உனகென்ன
மிதியடியா....?

பன்னாட்டு பன்றிகள்
வீசியெறியும் கழிவுகளை
கவ்வி தின்னும்
உன் குடும்பத்தை தவிர
இந்த தேசத்தில்
அனைவரும் அகதியே....

பலமுறை கைகழுவி
கரைபட கரைபட
வெட்கமின்றி சொல்லுகிறாய்
"நாங்கள் சுத்தமான
தங்கக்கட்டி"

பன்னெடுங்காலமாய்
உன்னை பார்த்து கொண்டிருக்கும்
நான் சொல்கிறேன்...

இந்தியா
பன்னாட்டு நிறுவனங்கள்
எச்சி துப்புமொரு
குப்பை தொட்டி...

எழுதியவர் : தமிழ்தாசன் (6-Jun-13, 11:22 am)
பார்வை : 434

மேலே