தந்தை...... தந்தையர் தின வாழ்த்துக்கள்..

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
--------------------------------------------------------------------------

தந்தை
======

ஜனனத்தின் மூலம் தந்தை
குடும்பத்தை காக்கும் இறைவன் தந்தை

தந்தையே..
நினைத்துப் பார்க்கையில்
எங்களை வேதனை வாட்டுகிறது
உன் துன்பத்தில்
நாங்கள் வாழ்ந்ததை....


அம்மா
பசித்தபோது சோறு ஊட்டினால்.....
தந்தையே... நீயோ
என் அறிவிற்கு படிப்பூட்டினாய்..
அறிவு வளர்ந்ததில்
என் வாழ்க்கை
இன்று முன்னேற்றத்தில்....

உந்தன் உழைப்பினில்.. வியர்வையில்...
மொத்தமாய் குடும்ப வளர்ச்சி...

ஞாபகம் வருகிறது...
ஒண்டு குடித்தனத்தில்
நாம் காற்றுமின்றி
வெந்து வாழ்ந்தது...

தந்தையே
உன் உள்ளம் பொறுக்கவில்லை...
சொந்த இல்லத்தில்... காற்றோட்டமாய்...
சுதந்திரமாய்... மகிழ்ச்சியோடு...
நம் குடும்பம் வாழ்வதற்கு
உன் எண்ணத்தில் வித்திட்டாய்...

என்ன செய்வாய் நீ?
நிதி ஆதாரமின்றி...
உணவிற்கே இரண்டு வேளை...
ஆசை நிராசையாகிடுமோ?
உன் முகத்தில் வருத்தக் கோடுகள்
உறக்கமின்றி நீ கழித்த இரவுகள்
இன்னும் என் கண்களில்
தெளிவான காட்சிகளாய்...
நினைவுகள் நெருஞ்சியாய்...

உன் எண்ணம் வீண் போகவில்லை
செயலாக்கினாய்...
உன் பணி நேர நீட்டிப்பில்...
பகுதி நேர பணியில் ஓய்வின்றி
நீ ஓடாய் தேய்ந்ததில்
சொந்தமானது
சின்னதாய் ஓட்டு வீடு...

மகிழ்ச்சியில்
அறிந்திருக்கவில்லை நாங்கள்
உன் ஆரோக்கிய தேய்வுகளை..
உன் அழிவினில்
எங்கள் சுகங்களை....

உன் பாதம் தொட்டு
வணங்க நினைக்கிறேன்
முடியவில்லை...
உன் படத்தை தொட்டே
வணங்குகிறேன் பூஜை அறையில்...

நீ.... வாழ்ந்தபோது
எங்களின் இறைவன்
இறந்த பின்னும்தான்...

வந்து ஜனித்துவிடு
என் மகனாய்...
எனக்கு நீ தந்தையாய் இருந்ததுபோல்
உனக்கு நான் தந்தையாய்...

நீ அடித்தளமிட்ட
இந்த அரண்மனையில்
ஆக்கி வைப்பேன்
உன்னை இளவரசனாய்...

காத்திருக்கிறேன்
என் கடனைத் தீர்க்க....
ஜனித்துவிடு.... நான் மகிழ்ந்திட...

அன்புடன்,
சாந்தி.

எழுதியவர் : சொ. சாந்தி (9-Jun-13, 10:21 pm)
பார்வை : 1977

மேலே