தெளிந்த குழப்பங்கள்

ஏதோ என்னிடம்
கேட்க மறந்து கடந்துசெல்லும்
காற்றானது தென்றலோ புயலோ
நாசித் துவாரங்களுக்கு
சுவாசிக்க குழப்பமில்லை

வண்ணத்துப் பூச்சிகளில்
புள்ளிகள் இடப்பட்டும்
கிறுக்கப்பட்ட கோலங்கள் ஏன்
பிடித்துவிடும் ஆசையிலே
விரல்களுக்கு குழப்பமில்லை

கடற்கரை மணலோடு
குழந்தைகளாய் கதை கேட்க
ஓடிவரும் அலைகள்
அடிக்கடி விடைபெறுவது ஏன்
கடலுக்கு அதன் இயல்பில்
துளியும் குழப்பமில்லை

குளிர்காற்று பட்டதும்
உருகத் தொடங்கும் மேகங்களில்
கண்ணீர் துளிகள் வழிவது ஏன்
மழையாகிப் போனதில்
மண்ணுக்கு குழப்பமில்லை

பூக்களோடு உறவாடும்
வண்டுகளின் பரிபாசையில்
போலி வாக்குறுதிகள் உண்டோ
பறக்க முடியுமென்ற
தெளிவில் குழப்பமில்லை

இரவு விளக்கென
நிலவை மட்டுமே ஒளியூட்டி
இருளுக்குள் சுழலும் பூமி
களைப்புற்ற கதியில்
உறங்கிப் போனால் ?
நமட்டுச் சிரிப்பே விடை
கற்பனைக்கு குழப்பமில்லை

குழப்பங்கள் யாவும்
தெளிவாகவே உள்ளதோ
எனது குழப்பத்திற்கும்
புரிதலில் குழப்பமில்லை !

எழுதியவர் : முகில் (10-Jun-13, 8:15 pm)
பார்வை : 77

மேலே