பட்டாம் பூச்சி
காலத்தின்
இருட்டறையில்
கழிகின்ற இளமை
பூவாக மலரும்
பொழுதில்
புழுவாக நெழியும்
அவலம்.
உறுத்தும்-உன்
உடலமைப்பால்-உலகம்
ஒதுக்கி உனை
வைக்க
சிறுத்து மனம் உடைந்து
சிறு கூட்டில்
உனை அடக்கி
இருட்டு வாழ்க்கையில்
வெறுப்பும் வேதனையும்
உன் வீட்டுக்குள்
நிமிர்ந்து நிற்க-உன் உருவம்
கூட்டுப் புழுவாக
குடங்கிக் கிடக்கும்
கொடுமை!
ஒளி இருள்
தெரியாது
மழை வெயில்
உணராது
காலம் நகரும்.
உன்னை அறியாமல்
மெல்ல மெல்ல
உன்உடலில்
வியப்பான மாற்றங்கள்
என்ன அற்புதம்!
இருட்டில் நீ நெய்த
வண்ண இறக்கைகள்
சுருட்டி உனை வைத்த
சிறைக் கூண்டை
எட்டித்தள்ள
இதோ நீ-உன்
முதுமையின் விழிம்பில்
பட்டாம் பூச்சியாய்
பார்ப்பவர் பரவசம் அடைய
தீண்டத் தயங்கியவர்
உன்னை தேடி அலைய
எட்டாத உயரத்தில்
பறந்து கொண்டிருகின்றாய்.-ஆனால்
உனக்கு தெரியாது
இன்னும் சில நாட்களில்-உன் வாழ்வு
முடிந்துவிடும் என்று!