சிங்காரத் தமிழே! உனக்கு சிலை எதற்கு!

எனக்கு
பூபாளம்
இசைக்க தெரியவில்லை
என்பதற்காக
வேதாளம் பாடியா
விடியப்போகிறது?

ஆம்!
முருங்கை
மரச்சலங்கைகளாய்
தொங்கும் மொழிகளா
என் தாய் தமிழ்
மொழிக்கு ஈடாகும்?

வேலைக்கு போடும்
விதை
கல்வி என்று
மூளைக்குள் திணித்துவிட்ட
முதல் மூட நம்பிக்கை
மடியவேண்டும்.

ஆங்கிலம் என்னும்
மொழி கற்றால்
தொழில் கிடைக்கும்
என்று சொல்பவன்தான்
அறிவிலிகளின்
பெருந்தலைவன்.

வானம் பார்த்தே
ஞானம் செய்தவன் தமிழன்.
அறிவியல் செய்தி
ஆயிரம் சொன்னவன் தமிழன்.

முதலில் பிறந்த தமிழால்
முடியாது என்பவன்-
மூளையை விற்ற
முதலால் வாழ
முடிவு செய்தவன்.

ஆங்கிலம் வேண்டும் என்று
ஏங்கியவன் யாரிங்கே?

ஒருவன் சிந்திக்கும்
மொழி என்று
ஓன்று உண்டு!
அது தான்
சிரசுக்குள் குடியிருக்கும்
அன்னை மொழி!

தாய் மொழியை
தள்ளியவன்
வாழ்ந்ததில்லை.

சோறு போட்ட
மொழி என்று ஓன்று இல்லை.
சோறு ஊட்டா
தாய் என்று
ஒருத்தி இல்லை.

சிகரத்தின் உயரத்திற்கு
சிலை எதற்கு?
சிங்காரத் தமிழே!
இங்கே
உன் உயிருக்கே
உலை வைக்கும்
நிலையிருக்கு.

உனக்காக
நான் சிந்தும்
கண்ணீருக்கும் ஒரு
விலையிருக்கு.

எழுதியவர் : மோசே (13-Jun-13, 2:24 am)
பார்வை : 179

மேலே