மதியே....(மறுபதிவு)
மேக மேலாடை நீத்த பின்னும்,
தேக பாலாடை போர்த்தி விட்டாய்...
வெள்ளாடை சகியே உன்னை,
வெளுக்க சலவை செய்தவன் எவனோ....
இரவுக் கடலில் ஒளிர்ந்து அடர்ந்தாய்,
விடியல் முடிவில் தேய்ந்து படர்ந்தாய்....
அல்லும் பகலும் பிறந்து மாளாமல்,
முழு நாளும் நீ தோன்றும் நாளென்று வருமோ....
இரவை ஆட்சி புரிந்து வந்தாய் நீ,
ஈரக் காற்றின் அறிவுரைப்படி....
விண்மீன் கூட்டம் படையாயிற்றே,
வீனரில்லை அக்கூட்டத்திலே....
ஆனால்,
ஆதவன் படையெடுத்தான் அதிகாலைப் பொழுதினிலே,
அழிந்த அரசாட்சி மதியுடையதாயிற்றே....
உன்னால் உறக்கம் மறக்கிறேன்,
துயில் வந்தாலும் உறங்க மறுக்கிறேன்....
பெண்மையே, உன் அழகைக் காண,
என் விழி இரண்டும் போதாதே....
உண்மையாய் உரைக்கிறேன்,
உனைப் போல எவளும் இங்கு கிடையாதே....
என் இமைக்குள் இறங்கிவிடு,
என் கருவிழிக்கு மாற்றாக....
எனதுயிராய் உனைக் காப்பேன்,
என் சுவாசக் காற்றாக....
வட்ட வடிவம் பெற்றாய்,
உலகை வட்டமிட்டு விட்டாய்....
எட்டிப் பிடிக்க நினைத்தால் மட்டும்,
ஓட்டம் கண்டு விடுவாய் நீ....
தூய மதியே,
தேயாதே என்றும்....
வளர் பிறை கண்டு,
வாழ்க எந்நாளும்....!!!!