பரிதவிப்பு
பரிதவிப்பு
ஆச்சி கொடியறுக்க,
தென்ன ஒல அடியினில,
ஆத்தா முகமலர,
கருமுத்து நான் பொறந்தேன்;
அழற கொரல் கேட்ட கும்பல்,
திரயத வெலக்கி கொஞ்சம்,
திருஷ்டி சுத்தி வரவேக்க,
ஏதோ புரிஞ்சுதுபோல்,
பொக்கவாயன் பல்லிளிச்சேன்;
மண் மேட்டுல புரண்டுகிட்டு,
சேத்து மண்ணுல அமுந்துகிட்டு,
வெள்ள சட்ட அழுக்கடிச்சு,
வீட்டுக்குள்ள நொழையரச்சே,
பொகையல மென்னுகிட்டு,
பின்னார குந்திக்கிட்டு,
உறக்க கத்தி அவ,
காட்டி என்ன கொடுத்துபுட்டு,
வெக்கங்கெட்டு அடிவாங்கி,
பழக்கப்பட்ட எம்முதுகை,
பாசத்தோட பச்சிலைய,
அரைச்சு அவ தடவி விட,
பாட்டி மடி தலையவச்சு,
கத கேட்டு கண்ணயர,
நெத்தம் நானும் பழகிகிட்டேன்;
சேரி மேல பள்ளிக்கூடம்,
அரை தூக்க வாத்தியாரு,
படிப்ப கேக்க ஆளு யாரு,
மணியடிச்சா மதிய சோறு;
கம்பு மேல கத்தி கட்டி,
கொடுக்கா புளி புடுங்கி,
கவண்கல்லு குறிவச்சு,
மாமரத்த மொட்ட போட்டு,
கடலை உண்டை, கமருகட்டு,
ஏகமாக தின்னுபுட்டு,
சுகங்கண்டு வளந்தனம்மா,
நம்ம கிராமம் தங்கமம்மா;
தெருக்கோடி ஆலமரம்,
ரம்பம் வெச்சு அறுக்கராக,
பேய் புடிச்ச மரமிதுவாம்,
அறுத்தெறிஞ்சா ஒழிஞ்சுடுமாம்,
சேரியுமே செழிச்சுடுமாம்;
தாகந்தீர்க்க தண்ணி தாரோம்,
வயிறாரத் தின்னதாரோம்,
வேலையத போட்டு தாரோம்,
மெய்யப்போல பொய்யசொல்லி,
வளந்து வெளஞ்ச நெலம் புடுங்கி,
வெளி நாங்க விறைச்சு நிக்க,
சுத்தி சொவுரு கட்டுறாக,
சிரிச்சுகிட்டே தலைவருங்க;
சூது வாது தெரியவில்ல,
கிராமத்துல வளந்துபுட்டோம்,
தொழிச்சால வந்துடுமாம்,
பஞ்சமெல்லாம் பறந்துடுமாம்,
அடிவயுத்த கலுக்குதைய்யா,
எமாத்தம் புரியுதைய்யா!
சம்பத்