மையப்புள்ளியும் வட்டப்புள்ளியும்
வட்டத்தில் எத்தனையோ புள்ளிகள் இருக்கலாம்!
ஆனால் --
ஒரே ஒரு மையப்புள்ளியின்
கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன!
அந்தப் புள்ளிதான் நிர்வாகி அல்லது தலைவன்!
அத்தனை புள்ளிகளும்--
எப்போதுமே --
மையப்புள்ளியை நோக்கியே இருக்கின்றன!
நோக்குவது ஒன்றைத்தான்! நோக்கம் ஒன்றல்ல!
பல புள்ளிகள் பணிவோடு
கட்டளைக்காக நோக்கிகொண்டிருக்கின்றன!
ஆங்காங்கே சில புள்ளிகள்
மையப்புள்ளி மையத்தை விட்டு நகரும்
தருணத்திற்காக காத்தபடி நோக்கிக்கொண்டிருக்கின்றன!
புள்ளிகளின் அளவு ஒன்றுதான்!
அளவுகோல் ஒன்றல்ல!
வட்டப்புள்ளியாய் இருப்பதிலேயே
மகிழ்ச்சி காணும் புள்ளிகளும் உண்டு!
மையப்புள்ளியாய் நகர்ந்தபின்பே
அமைதியடையும் புள்ளிகளும் உண்டு!
வட்டப்புள்ளிகள் இல்லையேல்
ஏது வட்டம்?
வட்டம் இல்லையேல்
ஏது மையப்புள்ளி?
வட்டப்புள்ளி பெரிதா? மையப்புள்ளி பெரிதா?
ஏன் விவாதம்?
தன் மகிமையை உணர்ந்து
தன் யதார்த்தத்தையும் ஏற்கும்
எந்த வட்டப்புள்ளியும்
உதாரணமாய் பிரகாசிக்கும்
ஒரு மையப் புள்ளிதான்!