பேரன்புக்குரிய தோழிக்கு-கே.எஸ்.கலை

என்னை நேசிப்போருக்கும் நான் நேசிப்போருக்கும் அன்புடன் வணக்கம்!

எழுத்து தளத்தில் நான் நுழைந்து ஒரு வருடம் ஆகப் போகின்றது ஜூலை முதலாம் திகதியுடன் !

இந்த தளம் என்னைப் பல்வேறு வழிகளில் செதுக்கி இருகின்றது.
என்னை எனக்கே அறிமுகம் செய்திருக்கின்றது.
சில சமயங்களில் என்னை நானே காதலிக்கும் அளவிற்கு என்னுள் ஏதோ செய்திருகின்றது !

தாக்கங்கள், ஊக்கங்கள், தர்க்கங்கள், தாக்குதல்கள் எல்லாமே தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஒருவனாக உலா வருகிறேன் இங்கே என்பது சிலவேளை நீங்களும் அறிந்திருக்கலாம் !

அப்படியே கொஞ்சம் ஒரு வருடம் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கிறேன்...

அரட்டை அடிப்பதற்காகவே உருவாக்கிய ஒரு கணக்குடன் முகநூலில் உலாவிக் கொண்டிருந்த காலம் அது...

தனிப்பட்ட காரணங்கள் சிலவற்றால் பெரிதும் பாதிக்கப் பட்டு, பொழுதை எப்படியாவது ஓட்டி விட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இணையம் என்பதை நாடி வந்த ஒரு சர்வ சாதாரண “வெட்டிப்பய” தான் நான் !

இப்படி வெட்டிப் பையனாய் முக நூலில் சுற்றித் திரிந்த என்னை தன் அன்பால், அக்கறையால் திசை மாற்றி எழுத்து தளத்தில் எழுத வைத்தவர் என் பேரன்பிற்குரிய தோழி ஜனனி அல்லது கஜனி எனும் கனேசியா !
(இன்னும் இரண்டு பெயர்களும் இருக்கிறது..இவருக்கு ஹஹஹாஹ்)

கஜனி என்று எழுத்து தளத்தில் இருக்கிறார் உங்களில் பலருக்குத் தெரியும் இவரை..

கஜனி தானாக எழுத்து தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி “இங்கு நீ எழுது”
என்று போட்ட கட்டளை தான் இங்கே இன்று நான் எழுதிக் கொண்டிருப்பதற்கான அடித்தளம்.

நான் இங்கே எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணமே கஜனி தான் !

சுமார் ஒரு வருடம் என்னுடன் பழகிய இவரைப் போல ஒரு தோழியையோ தோழனையோ நான் கண்டதில்லை என்ற உண்மையினை சொல்லியே ஆக வேண்டும் !

எனது “கரார்” குண செயற்பாடுகளைக் கண்டு என்னைப் புறக்கணித்துப் போகாமல்...அமைதியாய் , மிருதுவாய் என்னுடன் இவர் சண்டை போடும் பாணியே தனிச்சிறப்பு !

இதுவரை நேரில் சந்திக்காமல் இணையம் மூலம் மட்டுமே சந்தித்துக் கொண்ட எங்கள் நட்பிற்கு நேரில் சந்திக்கவில்லையே என்ற ஏக்கமோ, குறையோ மனதில் இல்லை....
இருப்பினும் நேரில் கண்டு கதைத்து கூடி குலாவி உருவாக்கிக் கொள்ளும் உறவுகளை விட, முகம் காணா இந்த உறவில் உயரிய நட்பு இருக்கிறது என்பது நாம் அறிந்த உண்மையே !

நட்பு எனும் பரிசுத்தமான உறவொன்று கஜனி மூலம் எனக்கு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமே !

இப்படியான என் அன்புத் தோழி நாளை (23.06.2013) திருமண பந்தத்தில் நுழைகிறாள் !

என் தோழிக்குத் தெரியும் எனக்கு வாழ்த்து சொல்ல எல்லாம் தெரியாது என்ற உண்மை.

ஆனால் மனப் பூர்வமாக ஆசைப் படுகிறேன்..
ஆழ் மனதிலிருந்த அழுகில்லா தூய்மையான உணர்வுகளுடன் சொல்லுகிறேன்.....
என் தோழி தன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று !

எழுதியவர் : கே.எஸ்.கலை (22-Jun-13, 5:57 pm)
பார்வை : 309

மேலே