திருகாணித் தடங்கள்....

உப்புப் படிகங்கள்
உருகி வழிந்தோடி
கோடுகள்
பரப்பியிருக்கிறது
கன்னப் பரப்புகளில்......

வடிப்பதற்கோ
வழிப்பதற்கோ சேகரங்களின்றி
எல்லாமுமாய்
கரைந்து விட்டிருக்கிறது
உணர்வுகள்....

தலைமுடி பிடித்திழுத்து
உயிர்மூச்சு புகட்டிய
குளக் கரைகளில் தொடங்கியதாய்
மின்னி மறைகிறது
ஞாபகங்கள்...

நசிந்த நெரிசல்களில்
விசிறிகளாக...
துரோகத் துவளல்களில்
தீர்த்தப் பீய்ச்சல்களாக....
தாய் மடிகளாகவும்...
தந்தை தோள்களாகவும்....
கலந்துயர்த்திய நாட்கள்..

திருமண முதிர்ச்சிகளின்
படுக்கைப் பிரித்தல்கள்
பொறுக்கா....
தேநீர் வேண்டுமெனச் சொல்லி
நடைபழக அழைக்கும்
அதிகாலை சூர்யோதயங்கள்...!

இணைகூடி முரண்பிரிந்து
பின்
மகளின் பூப்பெய்தல்
மகனின் திருமணங்களென
சபை நிறைத்த
சுப நொடிக் காலங்கள்...!

எல்லாம்..! எல்லாமுமாய்
என்னோடு கலந்திருந்து
எமனழைத்த குரலுக்காய்
எனை நீங்கிய
பொழுதுகளில்......

பிணமென்னும் பெயரெடுத்து
தூபப் புகைகளோடு
உணர்வுகள் புகட்டுகிறாய்
நீ....!
உயிரென்னும் சுமையேந்தி
காற்றிழுக்கும் இயந்திரமாய்
உன்னருகில்
நான்...!

எழுதியவர் : சரவணா (24-Jun-13, 8:36 pm)
பார்வை : 185

மேலே