நிலை மாறுமோ?

ஆடுகள் மேய்ந்து நிற்கும்
..அழகினில் மயங்கி நின்று
மாடுகள் போடும் ஆசையை
..மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு
கூடுகள் நோக்கிச் செல்லும்
..குருவிகள் பாடும் பாட்டில்
வாடுதல் போக்கிக் கொள்ளும்
..வசீகரம் எங்கள் தேசம் .

வானரம் துள்ளித் தாவும்
..வனங்களின் உள்ளேச் சென்றால்
மானமாய் வாழும் கவரி
..மான்களின் கூட்டம் காண்போம்
தேனடை தாங்கி நிற்கும்
..தேனியின் கூட்டு முயற்சி
கானக சொர்க்கம் காட்ட
..கவின்மழை தன்னில் நனைவோம்

போற்றுதற் கரியநல் பொக்கிஷம்
..போன்ற நாட்டை விட்டு
காற்றினில் மண்ணும் மணலும்
..கலந்துதான் வீசும் பாலை
நாட்டினில் வந்து நின்று
..நலமத்தில் கேடு கொண்டு
ஈற்றினில் எதுவு மில்லா
..ஈனப் பிறவியாய் ஆனோம் .

கட்டிய மனைவி பிள்ளை
..காத்திடல் மட்டும் இன்றி
கட்டிக் கொடுத்து அனுப்ப
..கன்னியாய் அக்கா தங்கை
பட்டினி வாழ்கை எல்லாம்
..படுத்திய பாட்டால் நெஞ்சில்
கட்டிய கோட்டை தகர்த்திக்
..காட்டினில் கண்ணை இழந்தோம்

தினசரி எகிறிச் செல்லும்
..தேசியப் பற்றாக் குறையால்
மனசினை கல்லாய் ஆக்கி
..மறுபடி நாடு சென்று
இனசனத் தோடு ஒன்றாய்
..இருந்திடும் எண்ணம் அதனை
கனவென எண்ணி மறந்து
..கண்ணீரில் வாடு கின்றோம்.

குடும்பப் பாரம் சுமந்தே
..கூனதும் விழுந்து போகும்
கொடுமை வாழ்க்கை வாழ்ந்து
..கோடை வெய்யிலில் உலர்ந்து
விடுமுறை காலம் சொந்த
..வீட்டினை நாடும் போது
இடுக்கணை மட்டும் காணும்
..எம்நிலை மாறு மாமோ?


..
..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Jun-13, 2:49 am)
பார்வை : 382

மேலே