பள்ளி நண்பர்களுடன் ஒரு சந்திப்பு....
27/12/12 - என் வாழ்வின் மறக்கமுடியாத நாள் ஒன்றாக அமைந்து விட்டது. ஆம், என் நீண்ட நாள் பள்ளி தோழர்களை பதினெட்டு வருடங்கள் கழித்து சந்தித்த நாள்...
முன்னதாக, நண்பர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் வைத்து ஒரு கெட் டுகெதர் வைக்கலாம் என்று என் பத்தாம் வகுப்பு நண்பன் சிவதாணு அலைபேசி வழியாக தெரிவித்தான். பள்ளி படிப்பை முடித்த பிறகு இவன் ஒருவனுடன் மட்டுமே அவ்வபோது சந்திப்பது உண்டு. தன் தந்தை வழி அவருடைய தொழிலை எடுத்து நடத்தும் அவன், அனைவரிடமும் அன்பாக பழகும் ஒரு உன்னத நண்பன். அவன் மகளின் பூப்புனித நீராட்டு அன்று தான் பழைய நண்பர்கள் சிலரை நான் சந்திக்க நேர்ந்தது. மீண்டும் எப்பொழுது சந்திக்க போகிறோமோ என்ற ஏக்கம் மனதில் இருந்துக்கொண்டே இருக்க, அவனிடமிருந்து இந்தமாதிரியான ஒரு சந்திப்பிற்கான அழைப்பு வந்தால் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா?
உடனடியாக சம்மதம் சொல்லி விட்டேன் நான், கன்னியாகுமரியில் தானே, எப்படியும் கலந்துகொள்ளலாம் என்ற ஆவலில்...
இரண்டு நாட்கள் சென்றபின் மறுபடியும் அவனிடமிருந்து அழைப்பு. நண்பர்கள் அனைவரிடமும் பேசியதாகவும், மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் மற்றும் ஊட்டி என இரண்டு நாள் சுற்றுலாவாக செல்லலாம் என அனைவரும் விரும்புவதாகவும் கூறினான்.
மனதில் திக் திக் ஆரம்பித்து விட்டது கணவர் என்ன சொல்லுவாரோ என்று. கூடவே அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமே என்ற அயர்ச்சி வேறு.
பல்வேறு குழப்பங்கள், உடல்நிலை கோளாறு என படுத்தி எடுக்க, ஒருவழியாக என்னால் வர முடியாது, உன் தங்கையை அழைத்துக்கொண்டு நீ கட்டாயம் சென்று வா என்ற கணவரின் ஒப்புதலோடு ஆரம்பமானது என் பயணம் - பதினெட்டு ஆண்டுகள் பின்னோக்கி நினைவுகள் செல்ல, எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட வேனில் குழந்தைகள் இருவர், மற்றும் என் தங்கையோடு பயணம் ஆரம்பித்தேன் நான்...
முன்னதாக, நண்பர்கள் அனைவரும் சிவதாணு வீட்டில் ஒன்று சேர்ந்து வேன் ஏறுவதாக ஏற்பாடு. நான் என் வீட்டிலிருந்தே வேனில் அங்கு சென்று விட்டேன். ஏற்கனவே கொஞ்சம் தாமதாமாகி விட, நண்பர்களின் வருகைக்காக வேனிலேயே காத்திருக்க ஆரம்பித்தேன். கலகல சிரிப்போடு தன் கணவரோடும் மகனோடும் வந்து சேர்ந்தாள் சரஸ்வதி கலா... கடைசி நிமிடம் வரை தன்னால் வர முடியுமா முடியாதா என்ற கேள்வி குறி இருந்ததாகவும், பின் எப்படியோ ஒருவழியாக வந்ததாகவும் அவளும் தெரிவித்தாள். அவளை முன்பே இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சிவதானுவின் மகளின் விசேஷத்தில் சந்தித்திருந்தேன். இந்த பயணம் ஒரு தனி மகிழ்ச்சி அளிப்பதாக அவளும் தனது சந்தோசத்தை பகிர்ந்துக் கொண்டாள்.
அடுத்து வந்தது மனோஜ். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக இருக்கும் அவன் என்னிடம் வந்து ஹாய் ஜீவா என்று கைநீட்டியபோது யார் என்ற குழப்பம் மனதில் இருக்கவே செய்தது. நான் மனோஜ் என்று அவனே அறிமுகம் செய்துக்கொண்டான். கொஞ்சம் மனதிற்கு நெருடியது, அய்யயோ எப்படி மறந்தோம் என்று. கைக்குழந்தையோடு அவனின் பயணம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. அவனின் கைக்குழந்தை அனைவருக்கும் செல்லக்குழந்தையாகி போனாள்.
ஏற்கனவே வருகிறேன் என்று சொன்ன நண்பன் ஒருவன் வராமல் போக, இன்னும் இரு நண்பர்கள் நேரடியாக கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் எங்களோடு இணைந்து கொள்வார்கள் என்று சிவதாணு அறிவிக்க, இரவு ஒன்பது மணியளவில் கோவை நோக்கி பயணமானது எங்கள் வேன்....
கோவை பேருந்துநிலையத்திற்கு காலை ஆறு மணியளவில் நாங்கள் பயணித்த வேன் வந்து நின்றது. அங்கு ஏற்கனவே வர வேண்டிய நண்பன் ஒருவன், குடும்பத்தோடு ரெயிலை தவறவிட்டிருக்க,ஒற்றை ஆளாய் நின்றிருந்தான் சுந்தரமூர்த்தி. அவன் மனைவியின் உடல்நிலை காரணமாக அவரால் வர முடியவில்லையென்றும் தான் நேரடியாக சென்னையிலிருந்து கோவை வந்ததாகவும் பின்னர் அறிந்தேன். நேரடியாக வேன் உள்ளே வந்த அவன், எந்த வித அறிமுகங்களையும் ஏற்றுக்கொள்ளாமலும் சகஜமாகவும் உள்ளே சென்று விட்டான். பின் நாங்கள் அமர்ந்த சீட் அருகே வந்து அமர்ந்தவன் அவனின் வழக்கமான இயல்போடு அப்படியே பேச ஆரம்பித்து விட்டான். இந்த பதினெட்டு வருடங்களில் அவன் மாறவே இல்லை என்ற நினைப்பு தான் என் மனதில் ஓடியது....
அவனோடு பேசிக்கொண்டிருக்கையில் ஒன்று சொன்னான். எவ்வளவு சின்ன குழந்தையாக இருந்தோம், இன்று நமக்கும் குழந்தைகள் இருக்கின்றனர், நாம் எப்படி எல்லாம் நம் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறோம், அப்படியென்றால் நம் அப்பா நம்மை எவ்வளவு பாதுக்காப்பாக நம்மை பாத்திருப்பார், நிஜமாவே அவர் கிரேட் என்றான். நம்மில் எத்தனை பேர் இப்படி யோசித்துப்பார்த்திருக்கிறோம்?
சென்னையில் ரெயிலை தவறவிட்ட நண்பன் நேரடியாக மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் வருவதாக தெரிவித்துவிட, பயண களைப்பு நீக்கி, காலை சிற்றுண்டி முடித்து ஈசா யோகா சென்டருக்குள் காலை பதினோரு மணியளவில் நுழைந்தோம். நான், என் தங்கை, மற்றும் சரஸ்வதி கலாவும் வேனிலேயே தங்கி விட, மற்றவர்கள் உள்ளே சென்றார்கள். மனோஜ்ஜின் கைக்குழந்தை எங்களுடன் இருக்க, அந்த தேவதையை பராமரிப்பதில் இரண்டு மணிநேரம் ஓடினதே எங்களுக்கு தெரியவில்லை. பின்னர் ஒருவழியாக மதியம் ஒரு மணியளவில் மீண்டும் பயணம் தொடர, மேட்டுப்பாளையம் செல்வதில் தாமதமானது. மதியம் சிற்றுண்டி முடித்து ப்ளாக் தண்டர் சென்று சேர்ந்த நேரம் மாலை நான்கு முப்பது. இனி உள் நுழைவது உசிதமல்ல என பெரும்பான்மையோர் நினைக்க, குழந்தைகள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதால் உள் செல்வது என முடிவெடுக்கப்பட்டது.
ப்ளாக் தன்டரில் வைத்து எங்கள் இன்னொரு நண்பன் மகாராஜன் குடும்பத்தோடு எங்களுடன் இணைந்துகொண்டான். இரு குழந்தைகளுக்கு தகப்பனான அவன் பயணகளைப்பில் இருந்தான். பின்னர் நாங்கள் ஊட்டி மலை ஏற துவங்கினோம். சுமார் ஒன்பது மணியளவில் ஊட்டி சென்ற நாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஹாலிடே வில்லா சென்றடைந்தோம். அங்கு நடுங்கும் குளிரில் நண்பர்கள் அனைவரோடும் அமர்ந்து இரவு உணவு உண்டது மறக்க முடியாததாய் இருந்தது. நீண்ட பயணம் எனக்குள் களைப்பை எடுத்துச்சொல்ல, பக்கத்து அறையில் நண்பர்களின் பாடல்கள் ஒலித்தது. எனக்கும் அவர்களோடு சென்று அமர ஆசை இருந்தாலும் அசதி என்னை தூக்கத்துக்குள் ஆழ்த்தியது....
மறுநாள் காலையில் வந்த செய்தி எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. பயணக்களைப்பும் இரவு உண்ட உணவு ஒத்துக்கொள்ளாமலும் மகாராஜன் வயிற்று வலியால் இரவு முழுவதும் அவஸ்தை பட்டான் என்பது தான் அந்த செய்தி. இதனால் அன்று முழுவதும் அனைவரும் ஒன்றாய் கழிக்கலாம் என்ற எண்ணம் தகர்க்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்கே தான் மீண்டும் சென்னை திரும்புவதாக அவன் அறிவித்து விட, வேறு வழியின்றி அவனுக்கான ஏற்பாடுகள் சிலவற்றை செய்து விட்டு அவனை பிரிந்து மற்ற நண்பர்கள் தொடர்ந்து பயணிக்கும் நிலை உருவானது.... அவன் மனைவியோடு பழக முடியாத சூழ்நிலை, அவன் குழந்தைகளை கூட முழுமையாக பார்க்க முடியாத வருத்தம் எனக்குள் ஏற்பட்டதை விவரிக்க முடியவில்லை.
இந்த பயணத்தை பொறுத்தவரை புதிதாய் ஒரு நட்பு வட்டம் உருவாகி இருந்தது. ஆம், எங்கள் குழந்தைகள் தங்களுக்குள் சகஜமாக ஒருவருக்கொருவர் அறிமுகமாகி கொண்டனர். ஒன்றாக இருந்த அந்த நாட்களில் அவர்களுக்குள் உருவான நட்பு எங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
பின் அன்று ஊட்டியை சுற்றிப் பார்த்தபின் இரவு மலையை விட்டு இறங்க துவங்கியது எங்கள் வேன். கடுமையான போக்குவரத்து நெரிச்சல் காரணமாக வாகனங்கள் நின்ற இடத்திலேயே முடங்க, நாங்கள் எங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளத் துவங்கினோம்...
மீண்டும் பள்ளிப் பருவம் சென்று பாடல்கள் பாடிக்கொண்டோம். சுந்தர மூர்த்தியின் நகைச்சுவை பேச்சால் முகம் மலர சிரித்துக் கொண்டோம். மனம் நிறைந்த திருப்தியுடன் பிரியவே பிரிய மனமில்லாமல் இனி மீண்டும் ஒரு சந்திப்பிற்கான நாளை ஆவலோடு எதிர்பார்த்தபடி மறுநாள் பிற்பகல் அவரவர் வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்த சந்திப்பில் இன்னும் சந்திக்காத நண்பர்களை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கத் துவங்கினேன்...