தெய்வம்
ரெக்கை முளைக்காத ரெண்டும்கெட்ட வயதில்
உரக்க சிந்திக்க பழகாத பால்ய மனதில்
கவி விதைகள் தூவிய கலைமகள் தாயே !
காலமாற்றத்தால் கவி விதைகள் முளைத்து
கற்கண்டு நெஞ்சில் படிபடியாய் வளர்ந்து
காண்பதை எல்லாம் கவிமழை பொழிய வைக்கும்
வான்வெளி பூந்தேவியே! போற்றுகின்றேன் போற்றுகின்றேன்!
பொன்மலர்தூவி போற்றுகின்றேன்! காத்தருள்வாய் கலைமகளே!
எந்தன் கருணைமிகு கட்டளையை சிறிது செவிமடு திருமகளே !
உந்தன் ஆனந்தத்தில் திளைக்கும்
எந்தன் ஏழைகளை; அன்றாடம்
அல்லாட விட்டுவிடாமல்-என்றும்
அன்போடு அரவணைத்துக்கொள் !
எஜமானர்களால் ஏளனபடுத்தப்படும்
எங்கள் ஏழைகள்மீது – உந்தன்
கடைக்கண் பார்வை எப்போதும்
பட்டுக்கொண்டே இருக்கட்டும் !
என் இனத்தவர் குடிப்பது
அன்றாடம் கூழ்தானென்றாலும்
அதையும் இடையிடையில்
நிறுத்திவிடாமல் கடைசிவரை
கிடைக்கும்படி அருள்புரி !
எங்கள் எஜமானிகள் வீட்டு
நான்கு கால்களூக்கேனும்
எங்கள் மீது இரக்கம் இருக்கிறது;
ஆனால் எங்கள் எஜமானிகளூக்கு
அது எங்கே இருக்கின்றது...?
அவர்கள் வீட்டு நாலுகால்களாவது
எங்கள்மேல் நன்றி காட்டுவதுகண்டு
எங்கள் ஆன்மா மகிழ்கின்றது ...!
ஓ ஆதிகேசா....!
அய்ந்தறிவுகளுக்கு மறக்காத
நன்றியை நல்கிய நீ..
எங்கள் ஆறறிவுகளுக்கும்
நல்கியது உண்மைதான் !
ஆனால் எங்கள் ஆறறிவாளர்கள்
வசதி வாய்ப்புகள் வந்ததும் அதை
வீண் விரயம் என்றே கருதுகிறார்கள்!
தெய்வநம்பிக்கை இல்லாதவனை
நாத்திகன் என்று சொல்லும் ஆத்திக கூட்டம்
அந்த ஆண்டவன் பெயரால் அடிக்கின்ற
அநாகரீக கொட்டங்களை – ஆளூம் அரசுகள்
அவ்வப்போது வேரறுத்து சிறைச்சேதம் செய்தாலும்
அந்த கயவர்களை நம்பும் பக்தர்கள் இங்கு ஏராளம் !
நாட்டில் நாத்திகவாதிகள் தோன்ற காரணமே
உயர்சாதி ஆத்திகவாதிகள்தான்!-அவர்களின்
அடாவடித்தனங்களே நாத்திகவாதிகளை
நாடாளச்செய்ததை உலகறியும் !
கோயிலுக்குள் நுழைய ஆதிதிராவிடனுக்கு தடையாம்
தடைப்போட்டவனை தடியால் அடித்து திருத்த-அந்த
ஆண்டவனால் அனுப்ப பட்டவன்தான் நாத்திகன் !
திராவிட நாட்டிலுள்ள திருஅருளர்களை தரிசிப்பதற்கு
ஆதிதிராவிடர்களூக்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டு.
நாத்திகவாதிகள் கேலிசெய்யாமல் வேள்வியா நடத்துவார்கள் ?
நாத்திகவாதியின் தெய்வ எதிர்ப்பெல்லாம் வெறும்
மேடை பேச்சோடுதான்! உண்மையில் ஆத்திகனைவிட
நாத்திகனுக்குத்தான் தெய்வநம்பிக்கை அதிகம் !
நாத்திகவாதிகளின் நெஞ்சங்களில்தான் தெய்வம்
நிரந்தரமாக குடியிருக்கிறக்கிறது !
ஆண்டவன் என்பவன் அனைவருக்கும் சமமானவன்!
என்பதை ஆத்திகவாதிகள் அங்கீகரிக்காதவரை
நாத்திகவாதிகளின் நியாயமான அறைகூவல்கள்
நாடெங்கிலும் நடைபோட்டுக்கொண்டுதான் இருக்கும்!
...........................................................................................................