இனிதான ஒரு எதிர்காலம் படைப்பீர்......

கடும் பாறை

மணலாக

மாறும்

பல நூறாண்டுகளில்

அது புனல் வளம்

காப்பதில் 

வந்தது சிரமம் கடந்த

சில நூறாண்டுகளில்.....

 

பாலாறு முதல்

நொய்யல் வரை

வறண்டும்

மனித குலம்

சூழ்ந்து சுரண்டுது

வீழ்ந்து புரளுது  

சுயநலச் சகதியில்.....

 

மனம் துள்ளத் துள்ள

அளவுக்கு மீறி மணல்

அள்ள அள்ள புனல்

மெல்ல மெல்ல

புகுந்து விட்டது

பூமித்தாயினுள்....

 

பத்தடியில்

பாய்ந்தோடி

பறந்து வந்த நீர்

பத்தாயிரம் அடி

துளையிட்டும்

பாதாளம் வரை

தென் படவில்லை....

 

மழை நீரைச்

சேகரிக்க அரசு

மானியம் கொடுத்தும்

தினம் காலிக் குடமேந்தி

ஐந்தாறு கல்த் தொலைவு

அனாயசமாய் நடந்து

அருமைக் குடி நீர்  

எடுக்க கூடுது கூட்டம்....

 

இந்நிலைமை

நீடிக்கின்

நம் பிள்ளை என்னாவான்???

நமை வைது

நாளை மண்ணோடு மண்ணாவான்.....

 

மழை நீர்

நாளைய

உயிர் நீர்

மணல் வளம்

நிலத்தடி நீருக்கு

பொன் வளம்  

இவை இரண்டும்

இனி வரும் சந்ததியின்

உயிர்க் கண் காக்கும்  

இமையாகச் சேமிப்பீர்

இனிதான ஒரு

எதிர்காலம் படைப்பீர்......

எழுதியவர் : nanjappan (7-Jul-13, 5:13 am)
பார்வை : 111

மேலே