அன்னையை கண்டேன்....

அன்னையர் தினம் என்று என் மகள் எனக்கு பரபரப்பாக ஏதோ ரகசிய பரிசு பொருள் செய்து கொண்டிருந்தாள். நேரம் போகவில்லை என்று இணையத்தை துருவி கொண்டிருந்த போது எதேர்ச்சையாக என் கல்லூரி ஜூனியரும் தற்போதைய சக பேராசிரியையுமான பாக்கிய லெட்சுமியின் முகநூல் சுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அங்கு அவளின் தோழியும், எனது ஜூனியருமான பால சுந்தரியின் செய்தி ஒன்றை படித்தேன்......

அந்த செய்தி:

சென்னை “Dr.K.M.Cherian Heart Foundation” பணி புரியும் அவள் கடந்த ஏப்ரல் 26ல் அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையை தன் மூன்றாவது குழந்தையாக தத்தெடுத்துள்ளாள். அக்குழந்தை 34 வார குறைமாத குழந்தையாக ஒரு திருமணம் ஆகாத 22 வயதான பெண்ணிற்கு ஏப்ரல் 24 ல் பிறந்திருக்கின்றது. ஏற்கனவே அந்த குழந்தையை கருவிலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த தாய், தனக்கு அந்த குழந்தை வேண்டவே வேண்டாம் என்று தனக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறாள். அந்த பெண்ணின் மருத்துவரின் கீழ் தனது ஆராய்ச்சி படிப்பை (Ph.D) தொடரும் பால சுந்தரி, அந்த மருத்துவரிடம் அக்குழந்தையை எந்த பாதிப்பும் இல்லாமல் (குறைமாத குழந்தைகளுக்கு அதன் சுவாச உறுப்பு (lungs) சரிவர வளர்ச்சி அடையாத நிலையினால் ஏற்படும் மூச்சடைப்பு) பிரசவிக்க செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாள். தானே முன்நின்று பிரசவத்தில் உதவியதோடு அந்த குழந்தையின் முதல் அழுகையை உணர்வுபூர்வமான மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறாள். அக்குழந்தையை இழக்க விரும்பாத அவள், தனது கணவர் மற்றும் குடும்பத்தார் அனைவரின் எதிர்ப்புகளையும் எதிர்த்து கண்ணீரோடு போராடி இருக்கிறாள். ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தாயான அவள் தன் போராட்டத்தில் வெற்றி பெற்றதோடு அதிகாரபூர்வமாக அக்குழந்தையை தத்தும் எடுத்துள்ளாள். குறைமாத குழந்தையான அக்குழந்தையை கனிவோடு கவனித்து தற்போது முழு ஆரோக்கியத்தோடு அக்குழந்தை அவள் வீட்டில் வளர்ந்து வருகிறது. அக்குழந்தையை வெறுத்த அவள் வீட்டாரும் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி வருவதோடு அவள் மகளும் அக்குழந்தையை தனது மடியில் வைத்து ஆசையோடு கொஞ்சுவதாக மகிழ்கிறாள். மேலும் தம்பி தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் தன் மகன், அக்குழந்தையையை திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கும் நிலை மாறி அவளை தன் தங்கையாக விரைவில் ஏற்று கொள்வான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளாள். தன் வாழ்நாளின் மீதி நாட்களில் அவளின் இந்த குட்டி தேவதையை பாதுகாப்பதாக உறுதியும் எடுத்துள்ளாள்.

அன்னையர் தினத்தில் இரு வகையான தாயை எனக்கு காட்டிய இறைவனுக்கு நன்றி. பால சுந்தரி மாதிரியான தாய் இருப்பதால் தான் இன்றும் நம் தேசம் அன்புக்கு இலக்கணமாய் திகழ்கிறது. இவளை பாராட்ட என் மனதில் வார்த்தைகள் இல்லை. கனத்த இதயத்தோடு அவளுக்கு என் நன்றி......

பிந்தைய செய்தி: அந்த குழந்தையை நன்கு பராமரித்த அவள், அவளை ஒரு ஆரோக்கியமான குழந்தையாக மீட்டெடுத்தாள். குழந்தை இல்லாத தம்பதியர் அவளை அந்த குழந்தைக்காக அணுக, மிகுந்த பாதுகாப்போடு சட்டபூர்வமாக குழந்தையை அவர்களுக்கு தத்து கொடுத்துள்ளாள். குழந்தை நலம்.

எழுதியவர் : ஜீவா (9-Jul-13, 7:34 am)
Tanglish : annaiyai KANDEN
பார்வை : 108

மேலே