மகாத்மாவுக்கு ஒரு பதில் (டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்)- பகுதி-5
மகாத்மாவுக்கு ஒரு பதில்.
**************************************
டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்
மகாத்மா இப்போது ரொம்பவும் முன்னேறிவிட்டார், இப்போது அவர் சாதியை நம்புவதில்லை, வருனத்தையே நம்புகிறார் என்று சிலர் என்னலாம், மகாத்மா ஒரு தீவிர காலத்தில் இருந்தார் என்பது உண்மையே அன்று.
அவர் வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் இந்து சாஸ்திரங்களின் பேரால் வழங்கப்படும் அத்தனையையும், அவதாரங்கள், மறுபிறப்பு உட்பட நம்பினார், சாதியை நம்பினார், ஒரு வைதீகனுக்கு உரிய வேகத்தோடு அதைப் பேணி வந்தார், சமபந்தியையும் கலப்புமணத்தையும் கண்டித்தார், சமபந்திக்கு எதிரான கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு மனோசக்தியை வளர்க்கவும் சமூக நன்மையைக் காக்கவும் உதவுகிறது என்று வாதிட்டார்.
அந்த பத்தாம்பசலி அபத்தத்தை அவர் மறந்து ''சாதி ஆன்மீக வளர்ச்சிக்கும் தேசிய வளர்ச்சிக்கும் தீங்கு பயப்பதாகும்'' என்று ஒத்துக் கொண்டுள்ளது நல்லதுதான், தன் மகனுக்கு வேறு சாதியில் திருமணம் செய்வித்தும் இந்த மாறுதலைக் காட்டுகிறது.
ஆனால் மகாத்மா உண்மையிலேயே முன்னேறி உள்ளாரா-? மகாத்மா ஆதரிக்கும் வருணத்தின் தன்மை என்ன-? சுவாமி தயானந்தா சரஸ்வதியும் அவரது சீடர்களான ''ஆரிய சமாஜிகளும்'' பரப்பிவரும் வேதியக் கருத்தா அது-? வேதத்தின்படி வருணம் என்பது ஒருவனின் சுபாவத்திற்கு பொருத்தமான பணியைத் தேடுவதாகும்.
மகாத்மாவின் வருணக் கருத்தோ சுபாவத்தைப் பற்றி கவலைப்படாமல் பரம்பரைத் தொழிலை நாடுவதாகும், மகாத்மா புரிந்து வைத்துள்ள சாதிக்கும் வருணத்திற்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை.
மகாத்மா வரையறுப்பின்படி பார்த்தல் சாதிக்கு இன்னொரு பெயர்தான் வருணம், ஏனென்றால் இரண்டின் நோக்கமும் பரம்பரைத் தொழிலை செய்யக் கூறுவதாகவே உள்ளது.
முன்னேறுவதற்கு பதில் மகாத்மா பின்னடைந்திருக்கிறார், வேதங்கள் கூறும் வருணக்கருத்துக்கு தன் விளக்கத்தை அளித்ததன்மூலம் ஒரு மென்மையான கருத்தைப் பரிகாசத்திற்கு உரியதாக்கி இருக்கிறார்.
வேதம் கூறும் வருணக் கோட்பாட்டை நான் மறுக்கிறேன், அதற்கான காரணங்களை என் உரையில் தந்துள்ளேன், அதே சமயத்தில் சுவாமி தயானந்தரும் இன்னும் சிலரும் வேதத்தின் வருணக் கொள்கைக்கு தரும் விளக்கம் அர்த்தமுள்ளதாகப் படுகிறது, தனிமனிதனை சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துவதற்கு பிறப்பை ஒரு தீர்மானக் காரணியாக அது, கூறவில்லை தகுதியையே அது அங்கிகரிக்கறது, வருணம் பற்றிய வேதத்தின் கருத்தை அபத்தப்படுத்துவதோடு அதை வெறுக்கத்தக்கதாகவும் ஆக்குகிறது.
வருணமும் சாதியும் இரு வேறுபட்ட கருத்தாக்கங்களாகும் ஒவ்வொருவருக்கும் அவரது தகுதிக்கு ஏற்ப என்பதன் அடிப்படையில் வருண கோட்பாடும், ஒவ்வொருவருக்கும் அவரது பிரப்பிர்கேற்ப என்ற அடிப்படையில் சாதிக் கோட்பாடும் அமைந்துள்ளன.
இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு ''வெண்ணெய்க்கும் சுண்ணாம்பிற்கும் இடையிலானா வேறுபாடுபோல் உண்மையில் இரண்டிற்கும் ஒன்ன்ருகொன்று முரணானதாகும்,''
ஒவ்வொருவரும் தம் பரம்பரைத் தொழிலையே பின்பற்ற வேண்டும் என்பதை நம்புவாரானால் சர்வ நிச்சயமாக அவர் சாதி அமைப்பை ஆதரிப்பவர் ஆகிறார், பின் அதைப்போய் வருண அமைப்பு என்று பேசும்போது அவர் சொற்குற்றம் செய்பவராகவும் பெருங்குழப்பம் விளைவிப்பவராகவும் ஆகிறார்.
மகாத்மாவின் குழப்பத்திற்கு காரணம், சாதி என்றால் என்ன-? வருணம் என்றால் என்ன-? இந்து மதத்தைக் காப்பதற்கு அவை இரண்டின் அவசியம் என்ன -? என்பது பற்றி தெள்ளத் தெளிவான இலக்கணம் அவரிடம் இல்லாமல் இருப்பதேயாகும்.
இந்து மதத்தின் சாரம் சாதி அல்ல என்ற தன் கருத்தை மாற்றிக் கொள்ள ஏதாவது மாயக் காரணத்தைக் கண்டுபிடிக்க மாட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார், அப்படியே செய்வார் என்று நம்பலாம், ஆயின் வருணமே இந்துமதத்தின் சாரம் என்று அவர் கருதுவாரா-? இந்த கேள்விக்கு யாரும் தீர்மானமான பதில் ஒன்றும் கூற முடியவில்லை.
சாதி அமைப்பு சரியானதே என்றே அவரது கட்டுரையில் டாக்டர் அம்பேத்காரின் குற்றச்சாட்டு என்ற பகுதியை வாசிக்கும் எவரும் எதிர்மறையான பதிலையே தருவார்கள், அந்தக் கட்டுரையில் இந்து மதத்தின் சாரமான பகுதி வருணக் கோட்பாடே என்று அவர் கூறவில்லை, அதற்கு பதிலாக இந்து மதத்தின் சாரம் சத்தியமே ஒரே கடவுள் என தெரியப்படுத்துவதும் மனிதக் குடும்பத்தின் சட்டம் அகிம்சையே என்பதைத் துணிவுடன் எற்பதுமே என்றே கூறுகிறார்.
ஆனால் திருவாளர் சாண்டாராமுக்கு அவர் எழுதிய பதிலை வாசிப்பவர்கள் உடன்பாடான விடையைத் தருவார்கள், அந்த கட்டுரையில் அவர் ''குரானை மறுக்கும் முஸ்லீம் எப்படி முஸ்லீமாக நீடிக்க முடியும்-?'' ''பைபிளை மறுக்கும் கிறிஸ்துவன் எப்படி கிறிஸ்டினாக நீடிக்க முடியும்-?'' சாதியையும் வருணமும் ஒன்றுதான் என்றால் இந்துமதத்தை வரையறுக்கும் சாஸ்திரங்களில் இருந்து பிரிக்கமுடியாத பகுதியே வருணக் கோட்பாடு என்றால் ''சாதியை அதாவது வருணத்தை மறுக்கிற எவரும் எப்படி தன்னை இந்து என்று அழைத்துக்கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.''
ஏன் இந்த சொல் புரட்டு-? ஏன் மகாத்மா மழுப்புகிறார்-? யாரை திருப்தி செய்ய-? முனிவரால் உண்மையை உணர முடியாமல் போய்விட்டதா -? அல்லது முனிவரின் வழக்கிற்கு அரசியல்வாதி தடையாக நிற்கிறாரா-?
இத்தகைய குழப்பத்தால் மகாத்மா அவதிபடுவதற்கு காரணம் உண்மையான இரண்டு இடங்களில் தேடலாம், ஒன்று மகாத்மாவின் உணர்ச்சிநிலை, அவர் எல்லாவற்றையும் குழந்தையைப்போல் எளிமைபடுத்தியே பார்கிறார், குழந்தை போலவே தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் திறன் உடையவர் அவர், குழந்தையைப்போலவே அவர் நம்ப விரும்பும் எதையும் நம்பிவிடுகிறார்.
எனவே சாதி மீது தன் நம்பிக்கையைத் துறக்க விரும்பினதும் அவர் துறந்துவிட்டது போலவே வருணத்தின்மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை அவர் துறக்க விரும்பும் காலம்வரை நாம் காத்திருக்க வேண்டியதே.
மகாத்மாவின் குழப்பத்திற்கு இரண்டாவது காரணம் அவர் மகாத்மா, அரசியல்வாதி என இரண்டுவிதமாகவும் நடக்க விரும்புவதாகும், மகாத்மா என்ற முறையில் அவர் அரசியலை ஆன்மீகமயப்படுத்த விரும்புகிறார், அதில் அவர் வெற்றிபெற்றுவிட்டாரோ இல்லையோ அரசியல் நிச்சயமாக அவரை வியாபாரமாக்கி விட்டுள்ளது.
எனவே தான் முழு உண்மையை பேசக்கூடாது என்பதை அரசியல்வாதி அறிந்திருக்க வேண்டும், அவர் முழு உண்மையைப் பேசினால் அவருடைய அரசியலுக்கு அது பாதகமாகிவிடும்,.
மகாத்மா எப்போதும் சாதியையும் வருணத்தையும் ஆதரிக்க காரணம் அதை அவர் எதிர்த்தால் அரசியலில் தன் இடத்தை இழந்துவிட நேரும் என அவர் அஞ்சுவது தான், அவரது குழப்பத்தின் மூலக்காரணம் யாதாயினும் மகாத்மா தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்பதையும் வருணம் என்ற பேரால் மக்களுக்கு சாதியை போதித்து அவர்களையும் ஏய்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதையும் அவருக்குச் சொல்லியாக வேண்டும்.
''-இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் நான் பிரயோகிக்கும் அளவுகோல் மிகவும் கடுமையானது,''- இந்த அளவுகோலை வைத்துப்பார்த்தால் இன்றுள்ள நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் தோற்றுப்போகும் என்கிறார் மகாத்மா.
''-எனது அளவுகோலின் தரம் உயர்வானது என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் அவை உயர்வானவையா தாழ்வானவையா என்பதல்ல பிரச்சனை, அவை சரியானவையா என்பதே...''-
''--சமூக நீதியின் அடிப்படையிலானா சமூக அளவுகோலைக் கொண்டே ஒரு மக்களையும் அவர்களின் மதத்தையும் மதிப்பிட முடியும்.''-
மக்களின் நன்மைக்கு அவசியமானதே மதம் என்று கொள்ளப்பட்டால், வேறு அளவுகோலை பிரயோகிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை, இந்துக்கள் மீதும் இந்துமதத்தின் மீதும் நான் பிரயோகிக்கும் அளவுகோல் மிகச் சரியானது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன், அதைவிட சரியான வேறு எந்த அளவுகோலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.''-
''-நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் என் அளவுகோலின் முன் தோற்றுப் போகலாம் என்ற கருத்து உண்மையாக இருக்கலாம், ஆனால் இந்த கருத்து மகாத்மாவை இந்துக்களின் தானைத்தலைவன் என்பதாகவும் இந்து மதத்திற்கு ஆதரவாகவும் போய்விடக்கூடாது, அப்படிப் போனால் அதற்கும் ஒரு பைத்தியக்காரன் மற்ற பைத்தியக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பது அல்லது ஒரு குற்றவாளி மற்ற குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பது என்பதற்கும் வித்தியாசம் இராது''-.
நான் குற்றம்சாட்டும் நிலைமைகள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புக்கு இந்துக்களும் இந்து மதமுமே காரணம், இவர்கள் என் அளவுகோலை எட்டத் தவறிவிட்டனர், அவ்வளவுதான் என்று மகாத்மா சொல்லிவிட முடியாது.
''-இந்த உலகம் மிகவும் குறைபாடுகள் கொண்ட உலகம், இதில் வாழ விரும்புபவன் அதன் குறைபாடுகளை அதன் குறைபாடுகளை சகித்துக்கொண்டுதான் வாழவேண்டும் என்பதை நான் அறிவேன்.''-
''-நான் இருந்து வாழவேண்டிய இந்த சமுதாயத்தின் குறைபாடுகளை சகித்துக்கொள்ள நான் தயார், ஆனால் தவறான லட்சியங்களை வளர்க்கும் சமுதாயத்திலோ சரியான இலட்சியங்கள் இருந்தாலும் அதன்படி சமூக வாழ்வை நடத்தாத சமுதாயத்திலோ எனக்குச் சம்மதமில்லை.''-
இந்துமதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும் தவறான சமூக வாழ்வை நாடுவதாலும் தான் நான் அவர்களை வெறுக்கிறேன், அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை, அதைவிட அடிப்படையானது அவர்களின் இலட்சியங்களைப் பற்றியதே.''-
********************* புரட்சியாளர் அம்பேத்கரின் இந்த உன்னத கட்டுரை அடுத்த பகுதியில் நிறைவுபெறும்.
***********************
எழுதியவர் - புரட்ச்சியாளர் டாக்டர் B .R அம்பேத்கார் ''அரிஜன்'' இதழ் - 15-08-1936
நன்றி;-
நூல் - சாதி ஒழிப்பு.
பக்கம்- 163,164,165,166,167,168.
வெளியீடு - அலைகள் பதிப்பகம், 1998
மொழியாக்கம் - வெ. கோவிந்தசாமி.