[451] இனிக் கனவு பார்க்கிலேன்..!
மழையாக வந்துநான் மனத்துளே இறங்குவேன்
--மண்ணென ஏன்விழுந்தாய்?
விளையாடும் தென்றலாய் கிளையாட்டி வருகிறேன்
--வேரொடும் ஏன்சரிந்தாய்?
குளிரூட்டும் மலருடன் கொடியெனப் படருவேன்;
--குடைசாய்ந்து கருகினாய்,ஏன்?
தெளிவான எண்ணமும் திடமான நெஞ்சமும்
--தெரியாது சென்றமா னே!
கோடையில் மழையெனக் கொட்டுவாய் என்றுநான்
--கொண்டதும் பகற்கன வே!
மேடையில் மாலையாய் மேல்விழு வாயென
--மிக,நினைத் ததும்கன வே!
ஓடையில் உன்னொடும் உருண்டதாய் என்னுளே
--உணர்ந்த்தும் பொய்க்கன வே!
பாடையில் மாலையாய் வந்து,நீ விழுவதாய்ப்
--பார்க்கிலேன் இனிக்கன வே!