முரண்...!
ஒரு காற்றின் வீச்சில்
கலைத்தலுக்கு
உடன்பட்டு பறக்கிறது
யாரோ இட்ட மாக்கோலம்...!
சருகாய் மாறிய பின்
சலனமின்றி மண்ணை
நோக்கிப் பாய்கிறது
முன்னாள் பசும் இலை!
வேரறுந்த பின்னால்
வெட்கம் ஏதுமின்றி
மண்ணில் சாய்ந்து
மட்கிப் போகிறது
ஒரு விருட்சம்!
இரத்தமும் சதையும்
கொடுக்கும் உன்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!
நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!
வகுக்கப்பட்ட
வரைமுறைகளிலிருந்து
கிளைக்கும் இறுக்கமான
கதறல்களோடு துக்கம்
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறிவு ஜீவன்கள்...!