தூப்புக்காரி நாவல் எனது பகிர்தல்

இது கடிதம் அல்லது விமர்சனம் அல்லது வடிகால்.. எப்படியோ, எனக்குள் சென்ற உணர்வுகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்... பகிராத சுமை கூடிக் கொண்டே போகிறது.. இது அழுகை.. எனக்குள் மட்டுமே இந்த அழுகை காய்ந்து விடக் கூடாது.. கண்ணீரில் விளையட்டும் தூப்புக்காரி படைத்த மலர்வதியின் எழுதுகோல்....தூப்புக்காரி படித்து முடித்த இரவில் நான் கடவுளை விரட்டிக் கொண்டிருந்தேன்.... அல்லது சாத்தானால் விரட்டப் பட்டுக் கொண்டிருந்தேன்.......

ஒவ்வொரு பக்கத்திலும் உருண்டு கொண்டிருந்த ஆத்மா ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சேரி என்று சொல்லப்படும் பகுதிக்குள் அழுது புரண்டு கொண்டிருந்தது.....இந்தியா வல்லரசு என்று இனியும் என்னால் முழுதாக நம்ப முடியாது.. தூப்புக்காரிகள் தலையில் சுமக்கும் மனித மலங்களில் வீசுகிறது சுரண்டல்களின் வாடை......

எது எதற்கோ இயந்திரம் கண்டு பிடிக்கும் நாட்டில், உலகில் ஏன் இதற்கு ஒரு இயந்திரம் கண்டு பிடிக்க முடியவில்லை.... ஒரு வேளை கண்டு பிடித்தாலும் கண்டு பிடித்திருந்தாலும் நமது தேசம் இந்தியாவுக்குள் அது வருமா என்பது நூறு சதவீதம் சந்தேகமே..... ஆண்டான் அடிமை உருமாறி காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு இன்னும் அடிமைகள் மலம் அள்ளும் , சாக்கடை அள்ளும் இயந்திரமாகவேதான் வலம் வர வைக்கப் படுகிறார்கள்......
அரசாள ஒரு வம்சம் ......ஆசிரியாராக ஒரு வம்சம்... மலம் அல்ல ஒரு வம்சம்.....

சாக்கடை தாண்டும் கணத்தில் முகம் சுழித்து மூக்கைப் பொத்திக் கொண்டு போகிறோமே. அதற்குள் இறங்கி சுத்தம் செய்பவனை ஒரு நிமிடம் யோசித்திருக்கிறோமா.....பொது கழிப்பிடத்திற்கு கூட போகத் தயங்குபவர்கள் நம்மில் பலர்.....ஆனால் அதற்குள் நுழைந்து சுத்தம் செய்து, அதற்காகவே தன் வாழ்நாளை அர்பணிக்கும் கனகம், மாரி, ரோஸ்லி போன்றோரகளை சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ள அரசும் தயாராக இல்லை... அறிவுள்ளவனும் தயாராக இல்லை.....பூவரசிகள் எத்தனை பேர்,வாழ வழியின்றி, தாய் செய்தாள் , தகப்பன் செய்தான்...என்பதற்காகவே தாமும் அதே தொழிலுக்கு வர வேண்டிய கட்டாயத்தை இந்த கொடிய காலமும் இன்றைய காலத்தை இயக்குகிற நாமும் கொடுக்கிறோம்.......

தூப்புக்காரியை படிக்கும் போதே குமட்டுகிறதே......அந்த வாழ்க்கையை வாழ்பவர்கள், அந்த வாழ்க்கையை அப்படியே நாவலாக்கிய மலர்வதியின் கொப்பளித்த கோபங்களில் எத்தனை குமட்டல்கள், கொந்தளிப்புகள் இருந்திருக்க வேண்டும்.....

மனோ மாதிரியான ஆற்றிலும் சேற்றிலும் கால் வைத்து தடுமாறும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.....விதி என்று சொல்லி அடி வாங்குவது போதும் என்று விழித்துக் கொண்டு படித்தாலும், 'என்ன படிச்சு என்ன...... நீ கக்கூசு அள்றவன் மகன் தான..... மகள் தான'........ கோட்டு சூட்டு போட்டவன் கேக்காம இருக்கலாம். ஆனா நினைக்காம இருக்கிறானான்னு கேட்டுப் பாருங்க.....மனசாட்சி முகம் திருப்பி மலம் கழிக்கும்.....

மலர்வதியின் வழியை உணர மட்டுமல்ல.....நான் கண் கூட கண்டேன்.... அத்தனை வலிமை அவர் வரிகளில்.....ஒவ்வொரு வரியிலும் உடைந்த உள்ளத்தின் கோபம் நெருப்பாகவும்....அதே சமயம் பரிதாபமாகவும் வெளிப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.....பூவரசியின் பிள்ளைக்காவது வரம் கொடுங்கள்....சாமிகளே.....பெரு வாழ்க்கை வாழட்டும் என்றல்ல.... சாக்கடை வாசமும், மலத்தின் வாசமும் இல்லாத இடத்தில் வாழ்ந்திட.....

நாவலை படித்து முடித்த கணத்தில் தொண்டை அடைத்து நின்றது, சக உயிர்களின் சிறு வாழ்வு...........இத்துனூண்டு வயிற்றுக்காக....கொஞ்சூண்டு காதலுக்காக....மீந்து போகும் கொஞ்ச மரியாதைக்காக......

கையேந்தும் மனிதர்களை ஒதுக்காதீர்கள் என்றே வேண்ட தோன்றுகிறது....நமக்காக போராடும் மனிதர்களை குறைந்த பட்சம் கேலி செய்யாமலாவது இருப்பதுதானே செய் நன்றி.....நண்பர்களே.... அலுவலத்தில் , வீட்டில், வீதியில் மலம் அள்ளும் சாக்கடை அள்ளும் மனிதர்களுடன் கை குலுக்கும் அளவுக்காவது நாம் இருக்கிறோமா...... யோசியுங்கள்....நமது மலத்தை சுத்தப் படுத்தும் அவர்களின் கைகளில் கடவுள் அமர்ந்திருப்பதை நம்மால் உணர முடியவில்லை எனில்.....எத்தனை தேங்காய் உடைத்தாலும், எத்தனை மெழுகுவர்த்தி ஏற்றினாலும், எத்தனை முறை மண்டியிட்டாலும் நாமும் நமது வேண்டுதலும் வீணாய் போவதை ஒருவரும் தடுக்க முடியாது.....

தூப்புக்காரி......... மேலாதிக்க மனிதர்களின் முகத்தில் காரி உமிழ்கிறாள்..... தங்களுக்காக மட்டுமே பூமி சுற்றுகிறது என்று நினைக்கும் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களின் வாசலில் மலம் அள்ளி வீசுகிறாள் ....நீங்கள் வாழும் அதே உலகில் நாங்களும் வாழத் தகுதியானவர்கள் என்று பறை சாட்டுகிறாள்...

நண்பர்களே..... இனி ஒருபோதும் அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்காதீர்கள்....உலகில் இரண்டே சாதி தான்... ஒன்று பணக்கார சாதி.... மற்றொன்று ஏழை சாதி.....மற்றதெல்லாம் செய்யும் தொழில் மட்டுமே.....

இனி ஒன்று செய்யலாம்.... மலர்வதி சொல்வது போல அவனவன் மலத்தை அவனவன் அள்ளட்டும்...அல்லது சுழற்சி முறையில் அனைத்து சாதியினரும் அள்ளட்டும். அவன் மட்டும் என்ன, வரமா வாங்கி வந்தான் மலம் அள்ள ......???????

ஒன்று இயந்திரம் கண்டுபிடி.... அல்லது ... சேர்ந்து அள்ளுவோம்...இனியாவது அவர்களை படிக்க விடுவோம்.... பொருளாதாரத்தை காரணமாக்கி, அவர்களை அடிமைகளாகவே வைக்க முயற்சிக்காமலிருப்போம்.....அடிமைகளை வைத்துக் கொள்வதாக நினைப்பது மன நோய்....

தூப்புக்காரி, என் மனதை தூர் வாரி விட்டாள் .....இனி நான் சமமானவன்.... பொதுவானவன்..... என்பதோடு ஒரு பெரிய சிந்தனைக்குள் எனைத் தள்ளி விட்டதற்கு மிகப் பெரிய நன்றியை மலர்வதியின் பாதத்தில் வைத்து விட்டு இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப் பட அதற்குள் சற்று நேரம் அமர்கிறேன்......

எழுதியவர் : கவிஜி (23-Jul-13, 9:52 am)
பார்வை : 338

மேலே