நானும் ஒரு நடிகன்

என் வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எண்ணிப்பார்க்க முடியாத
எழ முடியா வீழ்ச்சிகள்
மண் வாழ்க்கை நாடகத்தில்
மா பெரிய காவியங்கள்
மனம் சிதைந்த மனிதர்களின்
மக்கிப் போன ஓவியங்கள்
ஆடுகின்ற பேய் மனதில்
ஆயிரமாயிரம் ஆசைகள்
அழிந்துபோகும் ஆசைபற்றி
அனுதினமும் கனவுகள்
அற்பர்களின் சந்தையிலே
அன்பு மலர் விற்றவன்
அன்பு மலர் விற்றதனால்
துன்ப விலை பெற்றவன்
மின்னும் விழிப்பொற்குளத்தில்
மீன் பிடிக்கப் போனவன்
மின்னல் அடித்ததானால்
மனவேதனைக் குடித்தவன்
நாடகம் முடிந்ததனால்
நாயகன் நான் விடைபெற்றேன்
சூடுகின்ற மாலைகளோ
வீதியெங்கும் சிதறல்கள்
விதி முடிந்து போனதனால்
விடைபெற்றேன் விம்மலுடன்
வழிகாட்டிச் சென்றவைகள்
சாவூர் சென்று சேர்த்தன