கழுகுகளுக்கு அனுமதியில்லை

விவாகம் முடிந்து
முப்பது நாட்கள் கூட கடந்துவிடவில்லை
நாங்களின்னும்

பிடித்தமற்ற விடுப்பு முடிந்த பின்தினம்
பிடித்தமற்று அலுவலக இருக்கையில் நான்

உன் மனமேறியிருந்த ரணங்களை நிறைத்து
காலை விடைபெறும் பொழுது கொடுத்தாய்
கனமேறியிருந்தது உணவு மூட்டை

எனக்கும் மனமுண்டு வலியுண்டு பெண்ணே
ஆற்றுச்சுவரில் நத்தைகள் போல்
உன்னைத்தான் ஒட்டியிருக்கின்றன எனது சிந்தனைகள்

அலுவலக விளக்குகள் துர்நாற்றமடிக்கிறது
உன்னுடன் இருளின் நறுமணம் நுகர்ந்த எனக்கு

இங்கு அளிக்கும் தேநீர் எப்படி சுவைக்கும்
உனது வாய்நீரின் சுவையறிந்த பின்பு

நொடிமுட்களின் வேகம் மணி முட்களில் தொற்றிக்கொள்ளாதா என்ற ஏக்கத்தை
அலட்சியப்படுத்தி ஓடுகிறது கடிகாரம்

இந்த குளு குளு அறையினுள் எனை மட்டும்
சுட்டுக்கொண்டிருக்கிறது வெப்பம்
வெந்து விடுவேனோ என்று நொந்து விடாதே
வந்து விடுவேன் தந்துவிட தயாராயிரு அதை

கிளம்புகின்ற தருணம் தானிது

தலை முதலெழ சரீரம் பின்னெழ கையசைவற்று
பொந்திலிருந்து வெளிவரும் தேவாங்கினை நினைவூட்டி எழுந்த
எனது உயர் அதிகாரி சொன்னார்
"இதை மட்டும் முடித்து விட்டு கிளம்புங்கள் "

மனத்திரையில் ஒரு காட்சி
பொந்திலிருந்து வெளிவந்த தேவாங்கினை
ஒரு கழுகு பொறுக்கி கொண்டு பறந்தது

உள்ளினுள் ஒரு ஏக்கம் தான் நடக்க கூடாதாவென்று
ஆயினும் வீண் கற்பனை அது
ஏனெனில்
கழுகுகளுக்கு அலுவலகத்துக்குள் அனுமதியில்லை......

எழுதியவர் : சுரேந்திர பாபு (30-Jul-13, 9:02 pm)
பார்வை : 116

மேலே