புதுமை செய்!

(மரபுக் கட்டுபாட்டிலிருந்து விலகி வந்த படைப்பு)

மா திரையை விலக்கு மானுடம் செழிக்க
மாத்திரையாய் விளங்கு! பழைய சாத்திரங்கள்
சூத்திரங்கள் ஒழிகவென முழங்கு! முறையற்ற
ஆத்திரங்கள் மறைத்திடும் அறிவு!

ஊழலுக் கெதிராய் கொடியேந்து! விலைவாசி
வீழ உடனே கொடியேந்து! நலந்தரும்
நதிகளை இணைக்கப் பாடுபடு! உன்னுள்
விதிகளை விலக்கி வெளியேறு!

சாதிகள் இல்லையென சாற்று! உனக்குள்
தீதிலா திறமையை ஏற்று! மேதினியில்
காதல் கலப்புமணம் போற்று! இங்கு
புதுமைக்கு வேண்டாம் போர்வை!

மரபை மீறலா புதுமை? நம்முள் புதிய
மரபை ஏற்றலே நேர்மை! திறங்கொண்ட
மனத்திடம் கொள்ளுதல் மாண்பு! எனவேயுன்
கனவு நனவாகும் காண்!

மொழிப்பற்று இனப்பற்று கொள்! தீயோர்
வழிப்பற்றி நடப்பதுவைத் தவிர்! உழைப்பால்
நல்முறைத் தொழில்மேல் கவனங்கொள் உந்தன்
இல்லமதில் இழைந்திடுமே இன்பம்!

பகைவருக்குப் பகைவராய் மாறல்வீரம்! பணத்
தொகையினுக்கு அடிமையாதல் சோரம் மிகையிலா
ஈகைக் குணம் கொள்ளல் அழகு! வெற்றி
வாகை சூடல் நிஜமே!

வெ. நாதமணி,
05/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி (5-Aug-13, 9:03 pm)
பார்வை : 68

மேலே