பார்ப்போம் பார்த்து விடுவோம்

ஆடிமாதம்
காற்றுக்காலம்
வெயிலை தணிக்கவும்
மழையை உயிர்ப்பிக்கவும்
பிறக்கும் இந்த மாதம்
ஈழத்தமிழனுக்குமட்டும்
நெஞ்சு தீயாய் கனக்கும் மாதமென்றாயிற்று !
எல்லா மாதங்களையும் போலத்தான்
ஆண்டுக்கொருமுறை வந்து போகுமிந்த
ஆடிமாதம்
கருப்பு நெருப்புக்களை
நினைத்துருகும் மாதமாகையால்
பெருமைகொள் மாதமென்றாயிற்று
நெல்லியடியிலே மில்லரண்ணா
தொடக்கி வைத்த இந்த
நெருப்பவதாரம்
முள்ளிவாய்க்காலிலே முடிந்து போயிற்றாம் ?
பூமியே வியந்து பார்த்த
இந்த அற்புதமனிதர்கள்
எங்களில் ஒருவராகத்தானே
இருந்துபோனார்கள்!
புகைப்படங்களிலும்
புதுவைஅண்ணா கவிதைகளிலுமே
பார்த்த கரும்புலிகளை
அருகிலிருந்த ஒருத்தி
நெருப்பாகி நிஜத்தில் காட்டினாள்
கரும்புலிகள் பிறந்து வருவதில்லை
பிறந்தவற்றுளிருந்து வருகிறார்கள் என்பதை
அந்த இளையவள் நிரூபித்து போனாள்
காந்த புலத்தையே கதிகலங்க வைக்கும்
இரும்பு பிறப்பிவர்கள்
தண்ணீரில் நெருப்பு மூட்டும்
தந்திரம் தெரிந்தவர்கள்
எல்லோரையும் சாவு தொடும்
இவர்கள் சாவையே தொடும் தைரியசாலிகள்
ஆனை பசிக்கு சோளப்பொரி போல
இந்த அற்புதங்களை
கவிதைக்குள் அடக்கிவிட
தமிழில் உள்ள சொற்களால் முடியவில்லை
தொட்டு பழகியதில்லை
சொந்தத்திலும் எவருமில்லை
பக்கத்து வீடு இளையவளை தவிர
எவர் முகத்தையும் நேரில் பார்த்ததில்லை
அதுசரி
எப்போதுதான் என்னை பாரெனச்சொல்லி
இறைவன்வந்து நின்றான் முன்னாடி?
தெய்வப்பிறவிகளே!
வல்லரசுகள் கூடி எங்கள்
வாழ்வை முடித்து விட்டன
போதாதென்று
தமிழனை கொண்டே
தமிழனை கொல்லும்
தந்திரத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர்
என்ன செய்ய இயலும் எங்களால்?
உராய்வு நீக்கி
ஒழுங்கு படுத்தி
இது இப்படித்தான் எனச்சொல்லி
அது அப்படியே ஆகட்டுமென கட்டளையுமிட்டு
நெளி கோடாய் கிடந்த இனத்தை
நேராக்கி
சீராக்கி வைத்த மகன்
எங்கேயோ தெரியவில்லை!
அவன் கையிலிருந்தது
எங்களின் வாழ்க்கை
அவன் வாழ்க்கையில் இருந்தது
எங்களின் வரலாறு
இன்று என்ன செய்வதென தெரியாமல்
தவிக்கின்றோம்
எனினும்
கரும்புலிகளே!
உங்களை நெஞ்சிருத்தும் போது
உள்ளூறுமே ஒரு வீரம்?
அது இருக்கிறது எம்மிடம்
பார்ப்போம்
பார்த்து விடுவோம்

எழுதியவர் : மு. யாழவன் (5-Aug-13, 9:38 pm)
பார்வை : 56

மேலே