கவிஞன் என்பவன் .......

(அகவல்)
கவிஞன் என்பவன் கற்பனை ஊற்று
புவியையும் வானையும் புரிந்து கொண்டவன்
கண்களில் படுவதைக் கையகப் படுத்தி
கண்கவர் ஓவியக் கவிதைத் தருபவன்
எதற்கும் அஞ்சா இதயம் கொண்டவன்
கதவுகள் அற்ற கற்பனைக் கூடம்
கர்வமும் திமிரும் கலந்த கலவை
சர்வமும் இவனிடம் சரிநிகர் ஆகா
ஏழ்மை இருப்பினும் இழிகுணம் கொள்ளான்
தாழ்மை வரினும் தன்னிலைக் காப்பவன்
சூழ்நிலைக் கேற்ப சுயங்களை மாற்றான்
சூரியன் என்றால் சுடுதல் வேண்டும்
காரிருள் தன்னைக் களைதல் வேண்டும்
கடலே என்றால் காற்றலை வேண்டும்
கடலலை நிதமும் கரைதொடல் வேண்டும்
நதிநீர் என்றால் நாட்டில் அனைவரின்
பொதுநீர் என்றே பயன்படல் வேண்டும்
பலரது கவிதைகள் படிக்கத் தூண்டும்
சிலரது கவிதையில் சிந்தனை இருக்கும்
மணமிலா மலரால் மாட்சிமை இல்லை
உணர்விலாக் கவிதையால் ஒருபயன் இல்லை
உப்பிலா உணவை உண்ணத் தகுமோ?
சப்பென் றிருக்கும் சகலரும் வெறுப்பர்
பொருத்தமாய் சொல்லும் புதுமையும் சேர்த்து
கருத்தும் யாப்பும் கலந்த கவிதை
காலத்தைத் தாண்டி கண்முன் நிற்பதன்
மூலக் காரணம் உணர்வே ஆகும்
கச்சிதக் கவிதைகள் காலமும்
இச்சகம் தன்னில் இனிதாய் வாழுமே!

வெ. நாதமணி
11/08/2013

எழுதியவர் : வெ. நாதமணி (11-Aug-13, 8:29 pm)
பார்வை : 62

மேலே