மூடு மந்திரம்(தொடர்கதை 18)

அடித்து பிடித்து மருத்துவமனை சென்றால் வளாகம் முழுவதும் காவல் துறை கண் கொத்தி பாம்பாய் ஊர்ந்து கொண்டிருந்தது. கடைக் கண்ணில் பார்த்தவர்கள் கூட கைது செய்யப்பட்டார்கள். டீனின் மூளையே சிதையும் அளவுக்கு தாக்குதல் இருந்திருக்கிறது. குறைந்தது நூறு முறையாவது கொலையாளி ஒரே இடத்தில் அடித்திருக்க வேண்டும். இதுவரை கொலை செய்யப்பட்டவர்கள் ஒன்று டாக்டர்கள் அல்லது வக்கில்கள். ஆக இது இப்போதைக்கு முடிகிற கேசு மாதிரி தெரியவில்லை. இது தொடரும், அதற்குள் கொலையாளியை கண்டு பிடிக்க வேண்டும். போஸ்ட் மார்ட்டத்திற்கு பின் காவல்துறையின் கணிப்பும் கண்டிப்பும் செய்திகளில் தீயாய் பரவியது.

எதுக்கெடுத்தாலும் ரோட்ல வந்து உக்காந்துட்டா எப்பிடி சார்..... ஒண்ணு போராட்டங்கற பேர்ல வேலைக்கு போக மாட்டேங்கறீங்க, இல்ல, சாலை மறியல் பண்றீங்க..... இதை தாண்டி போராட வழியே இல்லன்னு நினைக்கறீங்களா.....?சாலை மறியல் பண்றதுனாலயும், வேலைக்கு போகாம இருக்கறதுனாலயும், கொலையாளி கிடைச்சிட மாட்டான்.... பொது மக்கள்தான் கஷ்ட படுவாங்க..... எத்தனை ஆம்புலன்ஸ் வழியில்லாம தடுமாறும் தெரியுமா...... எத்தன இன்டர்வியூ? எத்தன அழுவலக பணி ? எத்தன பள்ளி...... எத்தன கல்லூரி.... அரிசி, காய்கறி, பெட்ரோல், ஏற்றுமதி, இறக்குமதி .... இப்படி பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைக்கற வேலையத்தான் பாக்கறீங்க.... கொலையாளி அழகா திட்டம் போட்டு எஸ்கேப் ஆகிடுவான்.... தயவு செஞ்சு அவுங்கவுங்க வேலையை பாருங்க... கொலையாளிய கண்டு பிடிச்சு தண்டனை வாங்கித் தரது எங்க வேலை.. கை கூப்பி நின்றது காவல் துறை....
ராமசாமி, மயில்சாமியின் காதுக்குள் முனகினான்.. நம்ம டீனை போட மாட்டேங்குறான்னு சும்மாதாண்டா சொன்னேன்..... இப்படி நிஜமாவே சாவடிச்சுட்டானுங்க...... பயமா இருக்கு..... மயிலு... மயில்சாமி, பேசாம இருடா.... சந்தேக கேஸ்ல உள்ள தூக்கி போட்ருவானுங்க...... திருட்டு முழி முழிக்காம இருடா என்றான் கண்கள் திருப்பாமல், உதடு கூட பிரிக்காமல்.....

முடியலையே..... உடலெல்லாம் உதறியது ராமசாமிக்கு......

எத்தனை தேடியும் ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை.... கை ரேகை, கொலையாளி விட்டுச் சென்ற பொருள், கால் தடம் அப்படி இப்படி என்று எதுவுமே கிடைக்கவில்லை.... நன்றாக திட்டமிட்ட கொலை....டீனின் மனைவி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு டீனை வெள்ளை மூட்டையாக வாங்கிக் கொண்டு போனாள்.... ஆம்புலன்ஸை ஒட்டிக் கொண்டு போனான் மயில்சாமி....ஒரு குடும்பமே கதறியது.... மருத்துவ சமூகமே அதிர்ச்சிக்குள்ளானது .....

மெர்க்குரி லைட் வெளிச்சம் மனங்களை பிரதிபலித்தது என்றே சொல்லலாம்..... ஆராய் பாட்டி இல்லாத அவள் வீட்டுத் திண்ணையில் அனகா அமர்ந்திருந்தாள்... சற்று தள்ளி அமர்ந்திருந்தான் மயில், மனதுக்குள் அதிவேக ரயில் ஒன்றின் பின்னோக்கிய பயண சத்தத்துடன் . அடுத்தடுத்து அவனை சுற்றி நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் அவனை ஒரு காட்டாற்றின் இரைச்சலுக்குள் இழுத்துக் கொண்டு இருந்தது....அவன் உலகமே விபத்துக்களுக்கானது போன்ற ஒரு மாய வலை விரிந்து கொண்டிருந்தது.

பாக்கெட்டில் வைத்திருந்த கோட்டர் பாட்டிலை திறந்தான்... எதுவுமே கலக்காமல் கட கடவென குடித்தான்.. எரியும் தொண்டைக் குழியில் ஆராய் பாட்டியும் டீனும்எரிச்சலாய் நெளிந்தார்கள்.....

மூடு மந்திரம் தொடரும்.....

எழுதியவர் : கவிஜி (17-Aug-13, 10:05 am)
பார்வை : 105

மேலே