அடச் சீ பொட்டச்சி
அடச் சீ பொட்டச்சி
சிசுக்கொலைக்கு தப்பித்து
சிங்கார வாழ்க்கைப் பாக்கியம்
சின்னவள் எனக்கும்
சிறப்பாய் கிடைத்தது
சிறகடித்துப் பறக்க
சில்லறைச் சமூகத்தில்
சின்னதாய் ஒரு வானம்
சிறகுகள் கொஞ்சம் வெட்டப்பட்டே
சின்னவள் எனக்கும் !
பொட்டப் புள்ளையாய்
பொறந்தது தவறோ
பொல்லாப்பு சொல்லும் ஊரில்
பொல்லாத கோவம்
பொறக்குது எனக்குள் !
ஒப்பனை செஞ்சா
தப்பு சொல்லும் பூமி
கற்பனை செஞ்சாலும்
தப்பு சொல்லுதே !
சிந்தனைக்கு சிறகு கட்டி
சந்தையில விட்டுவிட்டா
முந்தானை முடிச்சவுக்க
சந்திக்கு கூப்புடுவாங்க !
கற்பனையா எழுதி நாங்க
விற்பனையா செய்யப் போறோம் ?
தட்டிக் குடுக்க சொன்னா
தடவிப் பார்க்கணும்மா ?
கைதட்டல் கேட்டாக்க
கட்டிப்பிடிக்க கூப்புடுரிங்க !
வாய தொறந்து கத்திபுட்டா
வையுரிங்க பொட்ட நாய்ன்னு ?
எழுத்தென்னா ஆண் சொத்தா ?
பொம்பளைன்னா வெறும் பித்தா ?
வெட்டியா பொறுக்கியா
வெவஸ்தக் கேட்டு திரியுறியே
வேட்டிய சுருட்டிக் கட்டி
வெங்காயம் வெட்டப் போ
சீலைய மடிச்சிகட்டி
சீமத்த ஆளப் போறோம் !
அப்ப வந்து சொல்லுப் பாப்போம்
“அடச் சீ பொட்டச்சி”ன்னு !