உழவர் பக்கம்

ஒருபக்கம்
கோடிகோடியாய் கொள்ளையடித்தவர்களும்
நாட்டை ஆட்சி செய்கிறார்கள்
மாடிமாடியாய் வீடுகட்டி சும்மா
மல்லாந்து படுத்துக் கிடக்கிறார்கள்

கடமை செய்யக் கையூட்டு கேட்கும்
கழிசடையுண்டு அரசாங்கத்தில்
ஆடைகட்டிய மிருகங்களுக்கு
அதிகாரிகள் என்ற பெயருமுண்டு

உழைப்பையும் உழைக்கும் வாய்ப்பையும்
உட்கார்ந்தவாறே சுரண்டிக் கொழுக்கும்
உள்நாட்டு பன்னாட்டுப் பகாசுர
முதலாளி வர்க்க முதலைக் கூட்டங்கள்......

மறுபக்கம்
வாடி வதங்கிய விவசாயிகள்
நாடு முழுக்க இருக்கிறார்கள்
வீடு ஒழுகும் மழைக்காலம்
காடு திருத்தி உழைக்கிறார்கள்

மிச்சங்கள் ஏதுமின்றி கடன் கழித்து
பட்டினியில் போராடும் உழவர்கள்
அறுவடை வரைக்கும் உழைத்தவர்கள்
மறுபடி பயிரிடப் பிழைத்தவர்கள்

ஒவ்வொரு நாளும் ஓயாது
உழைத்தும் உரிமை இல்லாது
வசதியைச் சிலரே பறிக்கவிட்டு
வாழ்வோர் தொகையே மக்கள் தொகையாய்

ஒருபக்கம் இருட்டாக
மறுபக்கம் வெளிச்சமாக
இருபக்கம் இருக்கிறது
இதுவரைக்கும் பார்த்தது போல்

வெளிச்சத்தில் ஒளிச்சேர்க்கை
அதில்தான் நம் வாழ்க்கை
உயர்ந்தது உழவன் பக்கம்
ஒருக்காலும் மாற்றமில்லை !

எழுதியவர் : முகவை என் இராஜா (18-Aug-13, 1:03 pm)
பார்வை : 50

மேலே