எந்திர பாவம்
மகிழ்வுந்தின்
முன் இருக்கையிலோ
இருசக்கர வாகனத்தின்
இருக்கையிலோ
உட்கார வைத்து
ஊரைச் சுற்றிக் காட்டி
வீடு திரும்பியதும்
‘உனக்குப் பிடித்தது,
உன் அப்பாவா?
இல்லை இந்த வாகனமா?’
என்ற மர்மக் கேள்விக்கு
மகன் பதில் சொல்வதற்குள்
என் நினைவுகள் பறந்தன
அப்பாவின் தோள்களில் அமர்ந்து
தலைப்பாகையைப் பிடித்தபடி
தரணியெங்கும் பயணம் போன
என் இனிய நாட்களை நோக்கி !