அழுக்கேறும் குவளைகள்

கவனித்துக் கொண்டிருந்தேன்
கண்ணாடிக் குவளையில்
தேநீரை உறிஞ்சியபடி....

அவ்விடத்தில் இரைந்து கிடந்தன
அரைகுறையாய் எரிக்கப்பட்ட
சிகரெட் பிணங்களும்
பாக்குத் தாள்களும்
பழத்தோல்களும்
பாலித்தீன் பைகளுமாய்
குப்பைகள்....

அங்கமும் ஆடையும்
அழுக்கேறிய அவர்
அங்கே வரும்வரை
காலியாகவே இருந்தது
குப்பைத்தொட்டி

சஞ்சலமில்லாமல் பொறுக்கிப் போட்டு
அதனைப் பசியாறச் சொன்னார்
சிரித்தபடி உள்ளே கிளறினார்
அது கைம்மாறு தர முடியாமல்
கைவிரிக்கவே ....

கடைக்காரரை நோக்கி நடந்தவரை
பைத்தியமென முணுமுணுத்தபடி
நகர்ந்து நின்றனர்
நாகரீக மனிதர்கள்

அவரது எச்சிலால்
தீட்டுப்பட்டு விடாதபடி
காகிதக் குவளையில்
கால்பங்கு தேநீர் நீட்டப்பட்டது
அவரை அவ்விடம் விட்டு
அப்புறப்படுத்துவதற்காய்...

புத்தி சுவாதீனமற்றவர்
யாரெனப் புரியாமல்
உடைந்து நொறுங்குகிறது
என் கண்ணாடிக் குவளை !

எழுதியவர் : முகவை என் இராஜா (19-Aug-13, 12:09 am)
பார்வை : 36

மேலே