காதலுக்கு மருந்து போடுகிறேன் !

(இக்கவிதை தினமலர் வாரமலரில்
மார்ச் 31 ல் வெளியானது ...)


காதலே
உன் வரையறை தான் என்ன?

மொழிகள் பிறக்கும் முன்
நீ பிறந்ததாலோ என்னவோ
உன்னை வரையறுக்க
எங்களால் முடியவில்லை
இன்று வரை !

வார்த்தைகளில் வார்த்தெடுத்து
உன்னைச் செதுக்குகிறோம்
ஒவ்வொருவரும் வெவ்வேறு
சிலையாகவே !

இன்று வரை நீயும்
ஒரு மதமாகவே
விதவிதமான கலாச்சாரத்தின்
பிரதிபலிப்பாய்
உலகத்து வீதிகளில்
உட்கார்ந்து
விளையாடிக் கொண்டிருக்கிராய்
கடவுளும் நீயும்
வேறில்லை என்பதாலா ?

வள்ளுவன் வடித்தான்
காதலுக்குள் காமம் என்று
உன்னை வைத்து
ஒரு ஓவியம் படைத்தான் !

நவீன வாலிபன் உடைத்தான் ...
பழைய மரபு
அது எனக்கூறி
காமத்திற்குள் காதல் வைத்து
கலாச்சாரப் பின்னணியில்
புதுக்காதலைப் படைத்தான்
அதற்குக் கடையும் விரித்தான் !

காவியங்களில் நீயோ
தெளிந்த நீரோடை
இந்தக் காலத்தில் நீயோ கலங்கிச்செல்லும்
கழிவு நீரோடை !

உந்தன் உடை களையப்பட்டு
நீ காயப்பட்டிருப்பது
நிஜம் தான் !

உண்மை சொல்
காதலே உன் வரையறை
தான் என்ன ?

அடுத்த தலைமுறை
உன்னைத் தீண்டும் முன்
மருந்து போடுகிறேன் !


--
த.மலைமன்னன்

எழுதியவர் : த .மலைமன்னன் (20-Aug-13, 4:08 pm)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 92

மேலே