சுகாதாரம் ....!!

நோயற்ற வாழ்விற்கு ஆதாரம் -நாம்
போற்றி பேணும் சுகாதாரம் !
ஆரோக்கியமாக நாமும் வாழ
சுற்றுபுற சூழலைக் காத்திடுவோம் ...!!

கூழானாலும் குளித்துக் குடிப்போம்
கந்தையானாலும் கசக்கிக் காட்டுவோம்
சமச்சீரான உணவைப் புசிப்போம்
சந்தோஷமாக நாமும் வாழ்வோம் ....!!

வீடுகள் தோறும் மரங்கள் வளர்ப்போம்
இல்லங்கள் தோறும் தோட்டம் அமைப்போம்
சுவாசிக்கும் காற்றும் தூய்மையாய் அமையும்
யோசிக்க வேண்டாம் இன்றே செய்வோம் .....!!

கழிவு நீரும் தேங்காமல் பார்ப்போம்
தூசு ஒட்டடை சேராமல் தடுப்போம்
வசிக்கும் இடத்தை சுத்தமாய் வைப்போம்
வியாதியில்லாமல் நன்றே வாழ்வோம் ....!!

ஈக்கள் மொய்க்கும் தின்பண்டங்களை
நிச்சயம் வாங்கிடக் கூடாது
கெட்டுப்போன பொருட்களையும்
உண்ணும் பழக்கமும் கூடாது ....!!

பச்சை காய்கனி கீரைகளை
நாளும் உணவில் சேர்த்திடணும்
நித்தமும் நாமும் சிரத்தையுடன்
நடையுடன் உடற்பயிற்சி செய்திடணும்.....!!

சுத்தம் சுகம்தரும் என்பதனை
கருத்தில் கொண்டு செயல்பட்டு
கிடைத்தற்கரிய மானுடப் பிறப்பின்
பயனைத் துய்த்து இன்புறுவோம் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Aug-13, 2:21 pm)
பார்வை : 12767

மேலே