இன்னும் எத்தனை தடவை இவர்களைக் கொல்ல முடியும்

படகொன்று அலைகளினூடே செல்லும் போது
நாளங்களை அடைத்து மூச்சுக்கள் நடுங்குகின்றன
பெருங்கடலின் பேரிரச்சலில்
கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கிறது

இந் நூற்றாண்டை நிரப்பிய துயரம் அவர்களுடையதே
மேலும் மேலும் பிரபஞ்ச வெளியெங்கும்
புதைத்துக் கொள்ள போதுமானவரை
அவர்களிடம் சவங்கள்
ஏனெனில்
அவர்களுக்கான நாடு அவர்களிடமில்லை

ஒரு புதிய சோகம்மிகு இனஅழிப்பு போல
மரண அறிவுப்புக்கள் படகுகளில் தொங்குகின்றன
ஆயினும்,பெயர் தெரியாத தீவுகளிற்கு
கடலலையில் உப்பிப்போக தீர்மானிக்கப்பட்டவர்களாக
நிலமற்ற இனம் பயணிக்கிறது .

எழுந்து ஆர்ப்பரிக்கும் அலைகளிடம்
கண்ணீர் விசும்பிக் கேட்கிறது
இந்தக் கொடிய பயணம்
எப்போது முடியுமென ஒரு குழந்தை
ஏதுமறியா இக்குழந்தை எப்படியறியும்
தன்னை இரக்கப்பட இங்கு யாருமில்லையென

முன்னர் படகொன்றில்
புகலிடம் தேடி காணாமல்போனவர்களின்
குருதிகள் அலை அலையாய் எழுவதாய் தோன்றும்
கடல்வெளியில் சவக்குழி மணம் எங்கும் நீந்த
அவலப் பாடலை தேம்பி தேம்பி பாடுகிறார்கள்
ஆதி மொழியில்
நிச்சயம் இவர்களும் ஈழத் தமிழரே.

5.9.2013புதிய தரிசனம் இதழில் வெளிவந்த எனது கவிதை

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (5-Sep-13, 9:57 pm)
பார்வை : 88

மேலே