[499] கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்!
விதியென் றென்னை
வீதியில் விட்டவன்
கதியினை எனது
கைகளில் எடுத்தேன்!
களிமண் பிசைந்தேன்;
கடவுளாய் மாற்றினேன்!
ஒளிர்வண்ணக் கலவையை
ஊற்றியே மினுக்கினேன்!
விழியெலாம் திறந்து
வியப்புடன் பார்த்தனர்!
வழியெலாம் வைத்து
வழிபா டெடுத்தனர்!
படைத்தவன் என்னைப்
பாடிட மறந்து
படைப்பினைப் போற்றிப்
பாடியே மகிழ்ந்தனர்!
அலைகடல் அடைந்தே
ஆட்டமும் நிற்கும்;
சிலைகளாய்க் கடவுளர்
சிறுத்துள் மறைவர்!
கூட்டமும் மறையும்;
கூறுகள் கலையும்!
பாட்டினை அலைகள்
பாடியே திரும்பும்!
==========