விநாயகரிடம் ஒரு வினவல்..........

வேழமுகம் கொண்ட - அழகு
வேலவ மைந்தனே வணக்கம் - நின்
வரலாறுதனை கேட்டால் ஆத்திகர்
நெஞ்சமும் மகிழ்வால் கொஞ்சம் மணக்கும்...

இன்று உனக்கு சதுர்த்தி - உன்மேல்
எனக்கோ கொஞ்சம் அதிருப்தி....
நீ வீற்றிருக்கும் நாடு - அதுதான்
கவிதை பறவையான என்கூடு...அது
பண்பாடெனும் கிளைகள் அகன்று - தேச
பக்தியும் அழிந்து
காலத்தால் சிதைந்து வருகிறது
கண்டுகொள்ளவில்லையே நீ
கஜமுகனே!

உன் அருகில் தாரம் இல்லை!
என் நாட்டிலும் இப்பொழுது
நிறைவான பொருளாதாரமும் இல்லை!! -
உன் கையில் சாப்பிட
லட்டு உண்டு.! - இன்று
என் நாட்டிலோ வீழ்ச்சியடைந்த
துட்டு உண்டு!!
நீ பெருச்சாளியில் அமர்ந்து இருப்பாய்
என் நாடும் கூட இப்பொழுது அப்படித்தான் ...
ஊழல் பெருச்சாளிகளின் கீழ்
சொந்த உணர்வற்று ஏழைகளுக்கு
உணவற்று போயுள்ளதே!
திட்டங்கள் போட்டாலும் தீரவில்லை
ஏழ்மை! - பேருக்கு
சட்டங்கள் போட்டாலும் சாகவில்லை
வன்கொடுமை !!- பாலை
மணலில் பெய்த மழைத்துளிகளாய்-இந்த
திட்டங்களும் சட்டங்களும்....

கொழுக்கட்டை விரும்பி உண்ணும் கோமகனே
நீ இருக்கிறாயா இல்லையா என்று
தினந்தோறும் நாட்டில் நடைபெறும் வாதம் !- ஆனால்
ஜெயிப்பதோ இடையில்வரும் தீவிரவாதம்!!
இதையேன்
தடுக்கவில்லை இறைவா நீ சொல்லிய வேதம்!!!
நீ இருக்கிறாய் என்று சொல்லிய பின்னும்...
மதங்களின் பெயரை சொல்லி மனிதரை
சூறையாடும் மனங்கள் இருக்கிறதே இன்னும்....
அதில் மாசடைந்து போகிறதே இந்த மண்ணும்...
அதுவும் ஏனோ ஆனைமுகனே?

பொய்யோ மெய்யோ அன்று
வரலாற்றில் சாபம் நீக்கி
மிருகத்தை மனிதன் ஆக்கினாய்...
இன்று மனிதர்களையே
மிருகமாக மாற்றி விட்டாயோ?
காமப்பசியில் சிறு கன்னியரை
வதைக்கும் மிருகங்கள்....
மதத்தின் போர்வையில் மனிதத்தை
புதைக்கும் மிருகங்கள் - மக்கள்
உழைப்பை சுரண்டி வாழும்
ஊழல் மிருகங்கள்....நீ
இருக்கிறாயென்று இதையெல்லாம்
கண்டுகொள்ளாமல் நாங்கள் - பொரி
கடலை சாப்பிடுகிறோம்!
தீமை வந்தால் இறைவா என்று
உனைத்தானே கூப்பிடுகிறோம்!!
எங்கு செல்கிறாய் நீ அப்பொழுது?
எண்ணி பார்க்கிறேன் நான் இப்பொழுது....

அமைதிக்காய் உன் கையில் ஆயுதம்
தாங்கினால் உன்னை கடவுள் என்கிறார்..
அவர் உரிமைக்காய் ஆயுதம்
தாங்கினால் மட்டும் கயவர் என்பதும் ஏனோ?
அமைதியும் உரிமையும் ஆயுதம் ஏந்தினால்தான்
கிடைக்கும் என்று அறிவுறுத்துகிராயோ நீ - என்
ஈழத்து தமிழ் சொந்தங்களை பற்றி கொஞ்சம்
இறைஞ்சுகிறேன் இறைவா இங்கு ....

நீ இருக்கிறாயா இல்லையா
தெரியவில்லை-இருந்தால்
இதையெல்லாம் நீயேன் அறியவில்லை....
எனக்கும் அது புரியவில்லை ....
காணாமல் போன மனித நேயமாய்
உன்னையும் தேடுகிறேன்...
கனவிலாவது வந்து சொல்வாயா
கணபதியே!

ஆயுதம் நீக்கிவிட்டு -உன் இருகையிலும்
மலரினை ஏந்தும் காலம்
மலர வேண்டும் எப்பொழுதும்-அன்றுதான்
என் மனம் உன்னை
நினைக்கும் முப்பொழுதும்....
நாட்டின் நிலை எண்ணி
மனதில் அதிகம் வெம்புகிறேன்!
உன்னால் நல்லது நடக்கும்
என கொஞ்சம் நம்புகிறேன்!!....

இன்னும் மீதி கேள்வி இருக்கிறது
கேட்க மனம் மறுக்கிறது......
போதும்! போதும்!! - விநாயகனே
"இல்லாதவனிடம் இத்தனை கேள்வியா"
நாத்திகர் கேட்கலாம்...
"எல்லாம் தெரிந்தவனிடம் ஏனிந்த கேள்வி"
ஆத்திகர் கேட்கலாம்...
இரண்டுக்கும் இடையில் உன்னைபோல
மௌனமே மகத்தான பதிலாய் இருக்கும்
எனக்கும்............
- கவிஅன்பு
09.10.2013

எழுதியவர் : கவிஅன்பு (9-Sep-13, 3:48 pm)
பார்வை : 72

மேலே