வேண்டாம் ஜல்லிக்கட்டு
சீறிப் பாயும்
காளையை அடக்க - இளமை
மீறிப் பாயும்
இளங் காளையே !
வாழ்க்கை துரத்தும் வயதில்
காளை துரத்தலாகுமோ !
படித்து விளையாடும் வயதில் - கொம்பு
பிடித்து விளையாடலாகுமோ !
எட்டித் துள்ளும் வயதில் - மாடு
முட்டித் தள்ளித்தான் மோதலாகுமோ !
வாலிபமே
அலங்கநல்லூர் - என்றும்
அலுக்காநல்லூர் ஆகிப்போனதா உனக்கு ?
காளை அடக்குவதே - என்றும்
வேலையாகிப் போனதா உனக்கு ?
தமிழனின் வீர விளையாட்டாம்
தப்பாட்டம் சிலம்பாட்டாம் - என
பல ஆட்டம் இருக்க
காளையுடன் உனக்கு
ஏன் இந்த
கொம்பாட்டம்
வம்பாட்டம் ?
வாழ்வின் பதினெட்டே
வேண்டாம் இந்த
விபரீத விளையாட்டே !
தாய்ப்பாலில் உனக்கு
வீரம் கலந்து பாய்ச்சியிருக்கலாம்
உன் அன்னை - இருக்கட்டும்
உன்னை இழந்து
அவள் கண்களில்
ஈரம் பாய்ச்சிவிடாதே !
இனி
மாட்டைத் துறந்து - இந்த
ஆட்டம் மறந்து போ
வேறு ஆளைப் பாரென்று - உன்
காளையிடம் சொல்லிப் போ
முரட்டுத் தனம் விடுத்து
அறியாமை
விரட்டிப் போ
அட..
அன்பெனும்
ஆயுதம் ஏந்தியே
தீமை தீண்டிப் போ
தடைகள் தாண்டிப் போ
வெற்றிப் படிகள் ஏறிப் போ
வீட்டை நினைத்துப் பார் - உன்
தாய்நாட்டை எண்ணி வாழ் !