காதல் தியானம்

உறக்கம் என்னிடம்
இரக்கமாய் சொன்னது...
நான்
விழிகளைத் தழுவி
ரொம்ப நாளாயிற்றேயென...
காகிதம் என்னிடம்
கவலையாய் சொன்னது...
அவள் பெயரை
என்மேல்
பச்சை குத்தி குத்தி
என் மேனியெல்லாம் காயமானதென...
எழுதுகோல் என்னிடம்
பணிவாய் சொன்னது...
எனை எழுதி எழுதி
உந்தன் காதல்
ஆயுள் நீள
எந்தன் ஆயுளை குறைத்துவிட்டாயேயென...
விரல்கள் என்னிடம்
அன்பாய் சொன்னது...
எழுதுகோலின் கழுத்தை
பிடித்து பிடித்து
என் ரேகைகளை தேய்த்துவிட்டாயேயென...
விழிகள் என்னிடம்
மெதுவாய் சொன்னது...
கண்ணீர் ஊற்று
வற்றி வற்றி
எனை மலடியாக மாற்றி விட்டாயேயென....
கவிதை என்னிடம்
கனிவாய் சொன்னது...
வார்த்தைகளாலே
அலங்காரம் செய்து
புது மாப்பிள்ளைப் போல்
எனை அவள் முன் நிறுத்தினாயே....
எனை பார்த்தவுடன்
"ச்சீ" யெனத் திட்டுவாளே
இந்த அவமானத்தை
எனை சுமக்க வைத்தாயேயென....
உடலோ என்னிடம்
தளர்வாய் சொன்னது...
அவளை நினத்து நினைத்து
நீ உண்ணாமலே
என் பிள்ளைகளை
பட்டினி போட்டு இளைக்க வைத்தாயேயென....
அடி பெண்ணே...
இப்போதும்
நான் உன்னைத்தான்
நேசிக்கிறேன்...
உலகமே எனக்கு
எதிரியானாலும்
என் இதயம் மட்டும்
உன் பெயரை
காதல் தியானமாய்
முனங்கிக் கொண்டுதான் இருக்கிறது...!