எனக்கென எல்லாம் ..

என் பயணத்தின் ஊடே
என்னை விடாமல்
துரத்தி வந்த மேகம்
தன் கனத்த இமைகளின்
சுமை இறக்க பொழிகிறது ,
மழை முத்தங்களை ! தன்
பிரிவின் பரிசு என ..
என்னைப் பார்த்து வெட்கப்பட்டு
மேகங்களைப் போர்வையாக்கி
ஒளிந்து கொள்கிறது வானத்து நிலவு
சிறு பிள்ளை போல ..
சாலையோர மரங்களும்
சாய்ந்து பார்க்கின்றன ,
நான் கடந்து செல்லும்
வினாடிகளில் வியப்போடு ..
மலர்ப் பாதைகளை
எனக்கென உதிர்த்த மஞ்சள் சிவப்பு
குல்மொகர்க்கள் வழியெங்கும்..
மெல்ல தலைநீட்டிப் பார்க்கிறது
அப்போது பிறந்த வானவில் ஒன்று,
என் வருகைக் குறிப்பறிந்து ..
அனைத்தும் என் வழிகளை
வண்ணமாக்க முயல,
முற்றிலும் என்னை இயற்கையில் தொலைத்த நிலையில் நான் ,
ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தின்
ஜன்னலோர அமர்வில் ..