புறநானூறு பாடல் 38 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிமுகம் காண்க)

இப்பாட்டின் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்ற ஊரினர். ஒருசமயம் இவர் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீவிர் எந்நாட்டீர்? நீர் எம்மை நினைத்தலுண்டோ?” என்று கேட்டான்.

அதற்கு, ஆவூர் மூலங்கிழார், “மலையை ஒத்த இளம் யானைகளின்மேல் ஆகாயத்தைத் தொட்டுத் துடைப்பது போன்ற பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து தோன்றும் பெரும் படையை உடைய வெற்றி வேந்தனே!

நீ கோபத்துடன் பார்க்குமிடம் நெருப்பு பரவ நீ கருணையுடன் பார்க்குமிடம் பொன் பூத்துச் சிறக்க சிவந்த சூரியனில் நிலவை விரும்பினாலும் வெண்மையான சந்திரனில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன்.

இனிமையான நிலையை உடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த கற்பகச் சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர்களும் தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, செல்வமுள்ளவர்கள் வறியோர்க்கு வழ்ங்குவதும், வறியவர்கள் செல்வமுடையவரிடம் சென்று யாசித்தலும் அங்கே செய்ய இயலாது என்பதனால் அதைச் செய்ய முடியாதென எண்ணி, அங்கே பெறும் இன்பம் இவ்விடத்திலே உனது நாட்டில் பெற முடியும்.

பகைவர் தேசத்திலிருந்தாலும், பரிசு பெற விழைவோர் உனது நாட்டில் நீ இருக்கின்றாய் என்று கருதுவதால் உனது நாட்டையே நினைப்பர். ஆதலால் உனது நிழலில் பிறந்து உனது நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவு எவ்வளவு என்று சொல்லவும் வேண்டுமோ?” என்று இப்பாடலில் கிள்ளி வளவனைப் பாராட்டுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்:

வரைபுரையு மழகளிற்றின்மிசை
வான் றுடைக்கும் வகையபோல
விர வுருவின கொடி நுடங்கும்
வியன்றானை விறல்வேந்தே
நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ 5

நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின்
நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த 10

எம்மள வெவனோ மற்றே யின்னிலைப்
பொலம்பூங் காவி னன்னாட் டோரும்
செய்வினை மருங்கி னெய்த லல்லதை
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும்
கடவ தன்மையிற் கையற வுடைத்தென 15
ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின்
நின்னா டுள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே.

பதவுரை:

வரை புரையும் மழ களிற்றின் மிசை – மலையை ஒத்த இளம் யானைகளின்மேல்

வான் துடைக்கும் வகைய போல – ஆகாயத்தைத் தொட்டுத் துடைப்பது போன்ற

விர உருவின கொடி நுடங்கும் - பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து தோன்றும்

வியன் தானை விறல் வேந்தே – பெரும் படையை உடைய வெற்றி வேந்தனே!

நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – நீ கோபத்துடன் பார்க்குமிடம் நெருப்பு பரவ

நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – நீ கருணையுடன் பார்க்குமிடம் பொன் பூத்துச் சிறக்க

செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் – சிவந்த சூரியனில் நிலவை விரும்பினாலும்

வெண் திங்களுள் வெயில் வேண்டினும் – வெண்மையான சந்திரனில் வெயிலை விரும்பி னாலும்

வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாகலின் - வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவ னாதலால்

நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ – உனது நிழலில் பிறந்து உனது நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவைச் சொல்லவும் வேண்டுமோ?

இன்னிலைப் பொலம் பூங்காவின் நன்னாட்டோரும் - இனிமையான நிலையை உடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த கற்பகச் சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர்களும்

செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை - தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர

உடையோர் ஈதலும் – செல்வமுள்ளவர்கள் வறியோர்க்கு வழ்ங்குவதும்

இல்லோர் இரத்தலும் – வறியவர்கள் செல்வமு டையவரிடம் சென்று யாசித்தலும்

கடவ தன்மையின் – அங்கே செய்ய இயலாது என்பதனால்

கையற உடைத்தென – அதைச் செய்ய முடியாதென எண்ணி,

ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் – அங்கே பெறும் இன்பம் இவ்விடத்திலே உனது நாட்டில் பெற முடியும் ஆதலால்

நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – உனது நாட்டையே நினைப்பர் பரிசு பெற விழைவோர்

ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்தென -. பகைவர் தேசத்திலிருந்தாலும், உனது நாட்டில் நீ இருக்கின் றாய் என்று கருதுவதால்.

இப்பாடல் பாடாண்திணை ஆகும். பாடு + ஆண் + திணை. பாடுதற்குத் தகுதி உடைய ஓர் ஆண் மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை.

நீ, உடன்று நோக்கும்வா யெரிதவழ, நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை உடையவன் என்று கிள்ளி வளவனின் வீரத்தையும், புகழையும் கூறுவதால் இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை – மன்னனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும். பகைவர் தேசத்திலிருந்தாலும், பரிசு பெற விழைவோர் உனது நாட்டில் நீ இருக்கின்றாய் என்று கருதுவதால் உனது நாட்டையே நினைப்பர் என்று கிள்ளி வளவனின் இயல்பையும், வள்ளன்மையையும் கூறுவதால் இப்பாடல் இயன்மொழித் துறையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-13, 8:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 166

மேலே