தமிழ் தேய்கிறதே!
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பேச்சும் தமிழ், மூச்சும் தமிழ் என கடந்த பல ஆண்டுகளாக திராவிட இயக்கத் தலைவர்கள் முழங்கி வருகின்றனர். 1967-இல் திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு மொழிப் போராட்டம், அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டமும் ஒரு காரணம்.
முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற அண்ணாதுரை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று ஓராண்டு காலம் அவர் நடத்திய ஆட்சியின் சாதனையாக சென்னை மாநிலம் என்கிற பெயரை மாற்றி அதற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியதையும், உலகத்தமிழ் மாநாடு நடத்தியதையும், தலைநகரம் முழுக்க தமிழ் அறிஞர்கள் பலருக்கு சிலை வைத்ததையும், இன்று வரை மாபெரும் சாதனையாக பறைசாற்றி வருகின்றனர். தொடர்ந்து திராவிட இயக்கங்களின் ஆட்சிக்காலத்தில் பெயர் சூட்டுவதையும், சிலை வைப்பதையும், மணி மண்டபங்கள் அமைப்பதையும், அடுக்குமொழி வசனங்கள் பேசுவதையும் தமிழ் வளர்ச்சிக்குத் தாங்கள் செய்த சேவையாக முழங்கி வருகிறார்கள்.
÷பொதுவாக தமிழகத்தில் தமிழ் மொழிப்பற்று என்று சொன்னாலே திராவிட இயக்கங்கள் என்றாகிவிட்டது. 1967-க்குப் பிறகு இன்றுவரை திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தில் தொடர்கிறது. ஆனால், இவர்களால் தமிழ் மொழியின் வளர்ச்சி குறைந்து போயுள்ளது என்பதுதான் நடைமுறை உண்மை.
தமிழக அரசில் தமிழ் வளர்ச்சிக்கென்று தனியே ஓர் அமைச்சகம் இயங்கிக் கொண்டிருக்கிறபோதும் கூட, தமிழ் மொழி வளர்ச்சி ஆங்கில ஆதிக்கத்தின் காரணமாக தளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது. தமிழக அரசு நிர்வாகத்திலும் தமிழ் மொழி பல நேரங்களில் புறக்கணிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களில், ஊடகங்களில் தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதும் வருத்தத்திற்குரியது.
நமது அண்டை மாநிலங்களில் மும்மொழி கல்விக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட போதும் கூட ஆரம்பக் கல்வி வரை அவர்களது தாய் மொழியே கட்டாயம் பயிற்சி மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மும்மொழிக் கல்விக் கொள்கை இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் இருமொழிக்கல்விக் கொள்கை தமிழக அரசின் கொள்கையாக இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
÷தமிழ் மொழியில் குழந்தைகளைப் படிக்கவைப்பது பிற்போக்குத்தனம் என்றும் ஆங்கிலவழிக் கல்வியே எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்கிற மூட நம்பிக்கை தமிழகத்தில் பரவலாக உள்ளது. தற்போது குடும்பத்தினர் மத்தியில் வீட்டில் பேசும்போது கூட தாய்மொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதுதான் நாகரிகம் எனக் கருதப்படுகிறது.
பெற்ற குழந்தை கூட தாய் மொழியில் அம்மா என்றழைத்தால் தழிழகத்துப் பெற்றோருக்கு வருத்தம் ஏற்படுகிறது. மம்மி, டாடி என்று அழைத்தால் மட்டுமே பெருமித உணர்வு பொங்குகிறது. இன்றைய சூழல் தமிழகத்தில் தமிழில் எழுதுவது, பேசுவது ஆகிய எல்லாமே பிற்போக்குத்தனமாகவும், ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது மட்டுமே அறிவாளித்தனமாகவும் கருதப்படுகிறது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசி உரையாடுகிறபோதும் கூட தமிழ் வார்த்தைகள் குறைந்து ஆங்கிலச் சொற்கள் அதிகம் கலந்து பேசுவதையே விரும்புகின்றனர். கையெழுத்துப் போடும் போதும், கண்ணில் படும் வர்த்தக விளம்பரங்களிலும், கேட்கும் வானொலி, பார்க்கும் தொலைக்காட்சி இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஆங்கிலச் சொற்களின் ஆதிக்கமே மிகுந்துள்ளது. ஆங்கிலமும் தமிழும் கலந்து தமிங்கிலம் என்கிற புதிய மொழி உருவாகியுள்ளது போலத் தெரிகிறது.
இதற்கெல்லாம் முதன்மைக் காரணம் தாய்மொழிக்கல்வி, அதாவது, தமிழ் மொழி வழிக் கல்வி குறைந்து வருவதேயாகும். நமது குருகுலக் கல்விமுறையில் தாய்மொழிக்கல்வி, அதாவது தமிழ்மொழி வழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குருகுலக் கல்வி முறையை ஒழித்து குமாஸ்தா கல்விமுறையான மெக்காலே கல்வி முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ளூர் மக்கள் பேசுகின்ற அவரவர் தாய்மொழி வழிக்கல்வி அழிக்கப்பட்டு ஆங்கிலம் எங்கும் திணிக்கப்பட்டது. உள்ளூர் மக்களின் மொழிகள் அடிமைகளின் மொழி எனவும், ஆங்கில மொழி மட்டுமே உலக மொழி என்கிற மாயை உருவாக்கப்பட்டது.
1830-க்குப்பின் ஆங்கிலேயர்களால் தமிழகத்தில் பள்ளிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் கூட தொடக்கக் கல்வி முழுமையாகத் தமிழிலேதான் இருந்தது. அதாவது துவக்கப் பள்ளியில் அறிவியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட அனைத்துமே தாய்மொழியான தமிழிலேயே கற்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டுமே மாணவர்கள் படித்தார்கள்.
நூற்றாண்டு காலம் நீடித்த இந்நிலை 1920-இல் நடுநிலைப் பள்ளிவரை அதாவது 8-ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்சி மொழியாக விரிவுபடுத்தப்பட்டது. 1938-க்குப் பின் உயர்நிலைப்பள்ளி கல்வி முழுவதும் தமிழே பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துவக்கப் பள்ளி நிலையில் இருந்த தமிழ், உயர்நிலைப் பள்ளி நிலை வரை பயிற்சி மொழியாக உயர்த்தப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும். ஆனால், தற்போது மழலையர் வகுப்பு முதல் உயர்கல்வி வரை அனைத்தும் ஆங்கிலமயமாகிவிட்டது என்பதுதான் சோகம்.
தாய்மொழி வழிக் கல்வி என்பது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது அண்ணல் காந்தியடிகள் முதல் உலகிலுள்ள அனைத்து அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மையாகும். இன்றைக்கும் உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அவரவர் தாய்மொழி வழிக்கல்வி பயிற்று முறையையே பின்பற்றுகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே தாய்மொழி வழிக்கல்வி பயிற்று முறைக்கே முதலிடம் தருகின்றன. ஆங்கிலம் தங்களது தாய்மொழி என்பதால் அவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்கிறார்கள், அவ்வளவே.
÷உலகில் மிகப்பெரிய நாடாகக் கருதப்படும் ரஷியாவில் ரஷிய மொழிவழிப் பயிற்றுக் கல்வி முறையே இப்போதும் நடைமுறையில் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய நாடான சீனாவில் சீன மொழிவழிப் பயிற்றுக் கல்வி முறையே நடைமுறையிலுள்ளது. அதேபோல உலகில் தொழிற்புரட்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானிய மக்களும் தங்களது தாய் மொழியான ஜப்பானிய மொழி வழிப் பயிற்றுக் கல்வி முறையையே பின்பற்றுகின்றனர். இதே நிலைதான் ஜெர்மனியிலும், பிரான்சிலும்.
இப்படி முன்னேறிய நாடுகள் அனைத்திலும் அவரவர் தாய்மொழி வழிப் பயிற்றுக் கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் அவரவர் தாய் மொழியிலேயே மருத்துவம், அறிவியல், பூகோளம், பொருளாதாரம், இசை, கணிணி உள்ளிட்ட அனைத்து துறை பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் தாய் மொழிக் கல்வி பயிற்று முறை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு ஆங்கில வழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஆங்கில வழிக் கல்வி முறையின் காரணமாக நமது மாணாக்கர்களின் சிந்திக்கும் திறன் குறைவதோடு புரிந்துகொள்ளும் முறையும் மாறுபடுகிறது. தாய்மொழியில் கற்பவனுக்கு சிந்திக்கும் திறனும், புரிந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது என்பது அனைத்து அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான உண்மை.
மருத்துவம், பொறியியல், உழவு, நெசவு, கணினி, இசை உள்ளிட்ட பல்வேறு துறைப் பாடங்களை நம் தாய் மொழியாகியத் தமிழில் படிக்கின்றபொழுது நாம் நன்கு புரிந்து கொண்டு, அந்தத் துறையில் பல சாதனைகளைப் படைக்க முடியும். சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற முடியும்.
ஆனால், புற்றீசல்கள் போல் தனியார் ஆங்கில வழி மழலையர் கல்விக் கூடங்கள் பெருகி வருகின்றன. குழந்தைகள் மீது ஆங்கிலம் திணிக்கப்படுகிறது. மெட்ரிக் கல்விமுறை ஒழிக்கப்பட்டு சமச்சீர் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் இந்த மெட்ரிக் பள்ளிகளெல்லாம் இப்பொழுது மத்திய கல்வித் திட்டத்திற்கு மாறிவருகின்றன. இங்கும் தமிழ் மொழி வழிக் கல்வி இல்லை.
உயர்கல்வியில் தமிழ் மொழியில் படிப்போர் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். இது தமிழ் மொழியின் அழிவிற்கு வழிவகுக்கும். எனவே தமிழ்மொழி வழிக்கல்வி கற்பதற்கு ஊக்கமும், ஆக்கமும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.
தமிழ் மொழி வழிக் கல்வி படித்து பட்டம் பெற்று வருவோருக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக மருத்துவம், அறிவியல், கணினி உள்ளிட்ட அனைத்து துறைபாடங்களையும் உயர் கல்வி வரை தமிழில் படித்துப் பட்டம் பெற்று வருவோருக்கு உரிய ஊக்கமும், ஆக்கமும் கொடுக்கும் வகையிலும் வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் வகையிலும் தமிழகத்தில் சட்டம் வரவேண்டும்.
வாழ்வியலில், வழிபாட்டில், பயிற்சி மொழியில் தமிழுக்கு முக்கியத்துவம் கோரி "வளர்தமிழ் இயக்கம்' கடந்த மூன்று நாள்களாகக் கோவையில் தமிழ் பயிற்று மொழி மாநாடு நடத்தியது.
பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் அருளாணையின் வண்ணம், பேரூர் தமிழ்க் கல்லூரியின் அறுபதாம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி நடைபெற்ற இம்மாநாட்டில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மற்றும் தமிழ் அறிஞர்களும் தொழில் முனைவோர்களும், தமிழில் படித்து சாதனை புரிந்தோர்களும் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் தமிழ் பயிற்று மொழி குறித்து எடுக்கப்படும் முடிவுகளுக்கு அரசு சட்ட வடிவம் கொடுத்து, தாய்மொழி வளர்ச்சிக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வித்திட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
÷தமிழகத்தில் ஊடகங்களில், பண்பலை, வானொலிகளில், தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் தமிழ்மொழியை அழித்து ஆங்கிலத்தைத் திணிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும். தூய தமிழ், ஊடகங்களில் நல்ல முறையில் உச்சரிக்கப்பட வேண்டும். இதற்குரிய கட்டாயத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஏற்படுத்த வேண்டும