[507] நவயுகத்துக் கனவுகளை நம்முள் நோற்போம்!

திரு கலை அவர்களின் ஒரு கவிதையே ,அதன் சொற்களே , என்னை இந்தக் கவிதையை வடித்துப் பார்க்கத் தூண்டியது-
தாய் வடிவு கொடுக்கின்றாள்;
தந்தை நெறிப் படுத்துகின்றான்!
புகழ் ஈன்றெடுத்தவளுக்கே ;
அதனால்தான் 'சான்றோன் எனக்கேட்ட தாய்' என்று புகழுடம்பை நினைக்கையில் தாயை நினைவு கூறுகின்றனர்!
---கருத்தாக்கம் கலை----எழுத்தாக்கம் எசேக்கியல்---
இனிப் படைப்புக்கு வருவோம்: ...
----------------- எண்சீர் விருத்தம் ----------------

தலைவாரி நிற்கின்ற பெண்போல் காணும்
=தளிரிலைகள் கொண்டமலை நாடாம் எங்கள்
உலகறிய உயர்ந்ததமிழ் ஈழம்; அந்த
= உயர்வதனைச் சொல்வதெனில் பொன்னும் குன்றும்!
நிலைமாறித் தெரிந்தாலும் நெஞ்சை அள்ளும்
=நிகழ்வுகளும் பண்பாடும் நிறைந்த தேசம்!
விலைமதிப்பில் லாப்பொருட்கள் மாரி யையும்
= விஞ்சுகின்ற வகையினிலே விளைக்கும் தேசம்!.........................................................................(01)

தேயிலையின் தளிர்களினைக் கிள்ளும் கைகள்
=தேசத்தை உயர்த்திடவே நீளும்; மேக
வாயிலிலே குளிரொடும் வதங்கி டாமல்
=வளர்கின்ற நாட்டுக்காய் வாழும்; மக்கள்
சாயலிலே வாழுமிவர் வீடோ கொட்டில்!
=சரித்திரத்தில் சுரண்டலுக்கோ இவர்கள் விட்டில்!
தேயுமிவர் கூன்விழுந்து திரிந்த போதும்
=தேசத்தை நிமிர்த்திடவே தயங்கார் கண்டீர்!.. .............................................................................………(02)

உழுதென்ன உழவனுக்கோ உணவிங் கில்லை!
=உழைத்தென்ன சுரண்டல்முன் உயர்விங் கில்லை!
அழுதென்ன குழந்தைக்கோ பாலிங் கில்லை!
=அன்னைமடி வற்றிவிடின் அதன்வாழ் வில்லை!
தொழுதென்ன கடவுளுக்கோ விழியே இல்லை!
=துணைவரவே அரசுக்கும் தோன்ற வில்லை!
எழுகின்ற விம்மலுக்கும் முடிவு உண்டேல்
இயமனுக்கும் தொழில்முடியும் ஓய்வு கிட்டும்! .......................................................................................(03)

முலைப்பாலில் நனையாநா கொண்ட பிள்ளை;
=முளையினிலே பனிகண்ட பயிர்போல் சாகும்!
விலைப்பாலும் வாங்கவழி யில்லாத் தாயோ
=விடுதலையைச் சீலையிலே விரைந்து தேடும்!
தலைதூக்க ஒட்டாத வறுமைத் தந்தை
=தனக்குதவக் கற்சிலைகள் தம்முன் வீழும்!
நிலையிவற்றை மாற்றவழி நினைக்கா தோரோ
=நேர்வந்து வாக்கினுக்கே நிற்றல் சோகம்! .......................................................................................(04)

இவைதொடர வேண்டுவதோ எமது நோக்கம்?
=இந்நாட்டின் வளம்நமது கையின் ஆக்கம்!
சுவைதொடரும் வாழ்வும்,ஏன் சிலருள் தேக்கம்?
=சுருண்டுபுழு வாய்வாழ மறுத்தே பார்ப்போம்!
தவப்பயனென் றிருப்பதையே தவிர்ப்போம்! கைகள்
=தட்டிவிட்டே எழுந்திடுவோம்! தலைமை காண்போம்!
நவயுகத்துக் கனவுகளை நம்முள் நோற்போம்!
=நன்மைக்கே போராடி நலங்கள் சேர்ப்போம்! ........... .........................................................................................(5)
===== ===== ============

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (16-Sep-13, 8:51 pm)
பார்வை : 199

மேலே