[508].. பரம்பொருள்- உழைப்பும் பணியுமே!

-----------------------ஆசிரியப் பா -----------------------------

பஞ்சாப் மாநிலம், பசுமையின் உறைவிடம்!
அஞ்சா நெஞ்சினர் அனைவரின் வாழ்விடம்!
நெஞ்சினுள், சென்ற நாள்முத லாகக்
'கெஞ்சியிங்கு இரப்பவர் கிடைப்பார் இல்லையோ?'
என்ற நினைப்பும் இருந்தது கண்டீர்!
ஒருநாள் அதன்விடை, உருவெடுத்து எதிரே
வந்தது கண்முன்; வகையது கேட்பீர்!

எனது வங்கிக்கு இடம்கொடுத் தவர்,ஒரு
சீக்கியச் செல்வன் ! தேக்கெனும் உடலினன் !
வாக்கினில் துணிவும், நோக்கினில் கூர்மையும்
தூக்கிய தோளினன் ! துணியினைச் சுருட்டி
வீக்கிய 'தலைப்பா' விளங்கும் சிரசினன் !
நாங்கள் இருவரும் நடுவழி ஒன்றில்
தூங்கொளி மாலை தொடங்கும் நேரம்
எதிர்,எதிர் வரவே இன்முகம் காட்டி
நலங்கள் கேட்டு நல்லன பேசினோம்;

சிலமணித் துளிகள் சென்றது,அப் பொழுது
வறுமையைக் காட்டும் சிறுமையின் உருவில்
வந்தான் ஒருவன் வாடிய முகத்துடன்;
தஞ்சம் கேட்க அஞ்சுவான் போலக்
கெஞ்சும் குரலில் கேட்டான்: 'தனக்குக்
கொஞ்சம் சில்லறை கொடுங்கள் என்றே!'
எங்களில் 'சர்தார்' எடுப்புடன் நிமிர்ந்து,
'எங்கிருந்து இறங்கினாய்?' என்றே கேட்டார்;
'தங்களூர் வேறொரு மாநிலம்' என்றும்,
'தனக்கொரு வேலையும் இல்லையால் இந்தத்
தனக்கேடு' என்றும் தான்,உரைத் திட்டான்!

--மின்வெட்டால் இடருற- மின்வந்தே தோடருது --

'உனக்குத் தெரிந்த தொழில்,உரை' என்றே
சர்தார் அவனைச் சற்றே கடுமையாய்க்
கேட்டு,அதைத் தொடர்ந்து 'கிளம்பிவா என்னுடன்
தருகிறேன் வேலை தவறாது உணவுடன்;
அருகில்தான் என்,இடம் அங்குவா' என்றார்;

உருகிய மெழுகாய் ஓடினான் வந்தவன்!
திருகிய மீசையில் கைகளை ஓட்டித்
திரும்பிய சர்தார் என்னிடம் சொல்வான்:
'ஒருவனும் இங்கே பிச்சை எடுக்கான்;
ஒருவனும் பிச்சை போடுவ தில்லையால்!
வரும்,பிற மாநில 'வழக்கினர்' தாமே
திரிகிறார் இங்கே; திரும்புவார் அவரும்,
ஓரிரு நாளில் உழைக்க மறுத்தால்'
சேருமே இங்கே சிறப்புகள்
உழைப்பவ னுக்கே! உணருவீர் என்றான்!!

திரும்பிப் பார்த்தேன் திரும்பியோன் பக்கம்!
அரும்பிய இரக்கம் அவசியம் இல்லைதான்!
விரும்பிடு வோர்க்கு வழிசெய் உழைத்திட!
நிரம்பிடும் பொருட்கள்! நிரம்பிடும் வயிறுமே!
விலையில் பிச்சையை விரும்புவோர் குறைவர்!
நிலையாம் மதிப்பில் நிமிருவோர் மக்கள்!
பரம்பொருள் உழைப்பும் பணியுமே
வரும்பிற எல்லா வளங்களும் பின்னே!
==என்னுடன் பேசிய சர்தார் என்னிலும் பலமடங்கு
வயதில் சிறியவனாயினும் அன்றுதான் நான் அவன்முன் மிகச் சிறியவனாய் உணர்ந்தேன்! ஏன் என்று சொல்லவும் வேண்டுமோ?=====

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (16-Sep-13, 9:25 pm)
பார்வை : 154

மேலே