மேஸ்திரி நெஞ்சம்

கேட்டவருக்கெல்லாம்
கட்டிக் கொடுத்தார்
சொகுசு வீடு.

இன்னும் இவர்
வாழ்வதென்னவோ
வாடகை வீடு.

ஊருக்குள்ளே
பாதிக்கு மேல் இவர்
கட்டிக்கொடுத்த வீடு

பெண்ணைக் கட்டிக்
கொடுக்கத்தான்
இல்லை ஒரு வீடு.

கல்லு மண்ணு மணலு
கம்பி சீமெந்து விலைபோல
கட்டுக்குள் அடங்காமல்
கிடக்கிறது சீதனம்

கட்டுதலுககான கஷ்டம்
கட்டிடத்தில் மட்டுமல்ல
கல்யாணம் கட்டுதலும்
கல்யாணத்துக்கு வாங்கிய
கடனைக் கட்டுதலிலும் என்று
கட்டி பார்த்து உணர்ந்தவரு.., இப்போ
கட்டிக் கொடுப்பதுதும்தான் என்று
கலங்கி நிற்கிறாரு

வருத்தப் படாத
வாலிபர் சங்கம்போல
வரதட்சிணை வாங்காத
வாலிபர் சங்கம் ஒன்று
வாராதா என ஏங்குது
இந்த மேஸ்திரி நெஞ்சம் !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Sep-13, 2:03 am)
பார்வை : 182

மேலே