பாரதி

வாளோடும்
வேலோடும் வந்தவனுக்கிடையில்
எழுது கோலோடு போருக்கு வந்தவன் ...

வேட்டேறிந்தவனோடு
பாட்டெழுதியும்
தீவிரவாதி ஆனவன்...
ஆம்
இருநூறாண்டு பகை தீர்க்க
இருநூற்று நாற்பத்தேழு
ஆயுதங்களோடு போராடியவன்...

பாரத நாடு பற்றி
பாரதி எழுதிய
பழம்பெருமை பாட்டெல்லாம்
பரங்கியருக்கு புரிந்திருந்தால்
பாவம் செய்து விட்டோமென
பதறி அழுதிருப்பான்
பாதி மயக்கத்தில்
பாதளச்சிறையில் கிடந்த
பாரத மாதாவின்
பாவ விலங்கு களைந்தெறிந்து
பாத பூஜை செய்திருப்பான்

கவிதையும் பாட்டும்
கண்காணாக் கடவுளர்க்கும்
காது தடவும் கன்னியர்க்கும்
காடண்ட முனிவர்க்கும்
நாடண்ட மன்னர்க்கும்
மட்டுமல்ல்
பாட்டாளி மக்களுக்கும்
பாவப்பட்ட மனிதர்களுக்கும்
பாடப்பட வேண்டுமென
பாரதிர பாடினான்
நா அதிர முழங்கினான்

இயற்கை பற்றிய
இவன் பாட்டுக்கெல்லாம்
இன்றுவரை நிகரில்லை
இவன் பாடா பொருளென்று
இந்த உலகில் எதுவுமில்லை
மண்ணின் உயிர்கள் சமமென்றான்
மலரும் மழையும் வரமென்றான்
பறவையும் விலங்கும் உயர்திணையென்றான்
கடலும் மலையும் உயிர்த்துணையென்றான்

மண் விடுதலை பேசியவன்
பெண் விடுதலையும் பேசினான்
பெண்ணை சமூக புண்ணென கருதுவோர்
கண்ணிலெல்லாம்
பண்ணெனும்
மண்ணெடுத்து வீசினான்
சுண்ணமெடுத்து பூசினான் .

சோற்றுக்கு வழியில்லா போதும்
மாற்றுக்கு துணியில்லா போதும்
சோகப்பாட்டு பாடவில்லை
சொரணைகெட்டு வாழவில்லை
சொர்க்கத்தை கனவு கண்டான்
சொந்த காசில் உணவு கொண்டான்

பாரதி நினைத்திருந்தால்
பல்லக்கிலும் பட்டு மெத்தையிலும்
மல்லாக்க படுத்துக்கொள்ளும்
மாண்புமிகு பதவிகளும்
மானமிகு பட்டங்களும்
வாழ்வின் கடைசிவரை
வரமென கிடைத்திருக்கும்
வளமென வாய்த்திருக்கும்

நாட்டை கவர்ந்தவனிடம்
மாட்டை போல் பணிசெய்தல்
நாணம் என்றுரைத்து
வானம் செல்லும்வரை
கானம் பாடி நின்றான்
மானம் சூடி வென்றான்

மகாகவி மாண்டுவிட்டானென்று
மரணச்செய்தி வாசிப்போருக்கு
மனமாரக் கூறுகிறேன்
மரணமென்பது பாரதியின்
உடற்கூட்டிற்க்கு தானே தவிர
சுடர்ப்பாட்டுக்கல்ல
எட்டுத்திக்கும் உள்ளவரை
எங்கள் தமிழ் தேருக்கு
ஏற்றதொரு சாரதி
எங்கள் கவி பாரதி

எழுதியவர் : sujithtamizhan (17-Sep-13, 3:25 pm)
பார்வை : 79

மேலே