பாசப்போட்டி
அப்பா அப்பா.. கார் சாவி எங்கே” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் மிதுன் .
“எதுக்கப்பா ..”
“எதுக்கா நான் ப்ராக்டிஸ் பண்ணத்தான்” என்றான் ஸ்டைலாக.
“ஐயோ அதெல்லாம் வேணாம்பா... அப்புறம் எங்கேயாவது இடிச்சிட்டீன்னா... ... “
“கார் டேமேஜ் ஆயிடும்ன்னு கவலை படறீங்களா?” மிதுன் விளையாட்டாக கேட்டாலும் அவர் கவலைப் படுவது தனக்காகத் தான் என்று அவனுக்குத் தெரியும்.
"சீ சீ அப்படியில்லைப்பா.. நீ நல்ல ட்ரைவிங் கத்துக்கிட்ட பிறகு எடுக்கலாம்னு சொன்னேன்" என்றார் சிவலிங்கம்.
"நல்ல கத்துக்கனும்னுதானே அவன் ப்ராக்டிஸ் பண்ணனும்னு சொல்றான், காரை எடுக்காம எப்படி ப்ராக்டிஸ் பண்ண முடியும்? இந்தாப்பா சாவி , நீ ஓட்டிப் பாரு, வேணும்ன்ன நானும் துணைக்கு வர்றேன்" என்றபடி வந்தாள் அம்மா சத்யவதி.
"உனக்கு கொஞ்சமாவது அவன் மேல அக்கறை இருக்கா? கார் ஓட்டுறேன்னு எங்கேயாவது அடி கிடி பட்டுக்கிட்டா என்ன ஆவறது?" மனைவியை நோக்கி சீறினார் சிவலிங்கம்.
“இல்லீங்க , நா என்ன சொல்ல வர்றேன்னா ...”
“அப்பா.. போதும் மறுபடியும் உங்க சண்டையை ஆரம்பிச்சுடாதீங்க. நா அப்புறமா கார் கத்துக்கறேன்”, கார் சாவியை டேபிள் மேல் வைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான் மிதுன்.
மிதுன் கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.ஒரே பிள்ளை,ரொம்ப செல்லம், வீட்டில் அவன் அப்பா அம்மாவுக்குள் சண்டை வருவதென்றால் அது அவனிடம் யார் அதிகம் அன்பு வைத்திருக்கிறார்கள் என்ற பாசப் போட்டியாகத்தான் இருக்கும்.
சிவலிங்கம் எப்போதுமே அவன் வலிக்கத் தாங்கமாட்டார், சின்ன வயதிலேயே அவனுக்கு காது குத்தும்போது அவன் கதறலை தாங்க முடியாது என்று காதுகுத்தும் இடத்திலேயே அவர் இல்லை.
இதைப் பலமுறை சொல்லி மனைவியை மட்டம் தட்டியிருக்கிறார்.
"நீயெல்லாம் எப்படித்தான் அவன் அழுகையை தாங்கிக்கறியோ. என்னால அவன் அழுவதை தாங்கவே முடியாது . அந்த இடத்திலேயே இருக்கமாட்டேன்" என்பார்.
அவன் உறவினர்களும் நண்பர்களும் கூட ,"மிதுன் இப்படி ஒரு அப்பா கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வச்சவன்தான்" என்று பெருமைப்படுவார்கள்.
“என்னப்பா..அப்பா கார் கொடுக்கலைன்னு கோவமா?, அவரைப் பத்திதான் தெரியுமில்ல...” என்று சொன்னபடி உள்ளே வந்தார் அம்மா.
“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.. “ என்றபடி புத்தகத்தை பிரித்தான் மிதுன்.
“அவருக்கு எப்பவுமே உம்மேல பாசம் அதிகம் அதனாலதான் அப்படி சொல்றார்” என்ற அம்மாவை மேலும்கீழும் பார்த்தான் மிதுன்.
“அப்போ உங்களுக்கு? “
“இல்லை என்னைவிட அவர்தான் உம்மேல பாசமா இருக்கார். சின்னதுல உனக்கு ஒரு ஊசி போட்டாக்கூட அவருக்கு தாங்காது ,அந்த இடத்த விட்டு ஓடிடுவார், இப்பவும் அப்படித்தான்”
தாயை பாசத்துடன் பார்த்தான் மிதுன் “ அவரைவிட உங்க அன்பு எந்த விதத்துலயும் கொரைஞ்சதில்லம்மா....” என்ற மிதுனை வியப்புடன் பார்த்தாள் சத்யவதி.
"ஒரு குழந்தை தனக்கு வலிக்கும் சமயத்தில் தந்தையையோ தாயையோதான் ஆறுதலுக்காக தேடும், அந்த சமயத்தில் அதன் அழுகைக் காணப் பொறுக்காமல் ஓடி ஒளிவது சிறந்த பாசம்னு எப்படி சொல்றது ,தனக்கு கஷ்ட்டமா இருந்தாலும், தன குழந்தைக்கு ஆறுதலா கூடவே இருந்து தைரியப்படுத்தரதுதான் உண்மையான அன்பு, அதைத்தான் நீங்களும் இதுவரைக்கும் செய்திருக்கீங்க, அந்த வகையில பார்த்தா அப்பாவைவிட உங்களுக்குத்தான் என்மேல அன்பு அதிகம்". மிதுன் பேசி முடிக்க ,
தன் மகன் தன்னை சரியாக புரிந்துவைத்திருப்பதை உணர்ந்து பெருமிதம் அடைந்தாள் அந்தத் தாய் .
கதவருகே நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவலிங்கமும் சிந்திக்க ஆரம்பித்தார்.
நன்றி சௌந்தர்
நிலாமுற்றம்