புறநானூறு பாடல் 108 – வேள் பாரி
இப்பாட்டில் வேள் பாரியின் கொடையறத்தைச் சிறப்பிக்கத் தொடங்கிய கபிலர், “குறத்தி அடுப்பில் செருகி எரிக்கப்பட்ட காய்ந்த கொள்ளிக்கட்டை சந்தன மரம் ஆதலால் அதன் மணமிக்க புகை, அதற்கு அருகாமையில் மலைச்சாரலில் உள்ள வேங்கை மரத்தின் பூக்களுடைய கிளைகளுக் கிடையே தவழ்கிறது.
இத்தகைய பறம்பு நாட்டைப் பாடுவோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்ததால் நாடு அவர்களுடையது ஆயிற்று. பறம்பு இல்லையாயின் நீயே வேண்டு மென்று பாரியையும் பரிசிலர் இரப்பாராயின் தான் விரும்பும் கொடையறத்தை மேற்கொண்டு, வரமாட்டேன் என்று சொல்லாமல் அவர் எல்லையில் பாரி நிற்பான்” என்று கூறுகிறார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆர மாதலி னம்புகை யயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு
பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னா னவர்வரை யன்னே.
பதவுரை:
குறத்தி மாட்டிய வறற் கடைக் கொள்ளி – குறத்தி அடுப்பில் செருகி எரிக்கப்பட்ட காய்ந்த கொள்ளிக் கட்டை
ஆரம் ஆதலின் – சந்தன மரம் ஆதலால்
அம் புகை அயலது – அதன் மணமிக்க புகை, அதற்கு அருகாமையில்
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடினரது – மலைச்சாரலில் உள்ள வேங்கை மரத்தின் பூக்களுடைய கிளைகளுக்கிடையே தவழும் பறம்பு நாடு, பாடுவோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்ததால் அவர்களுடையதாயிற்று.
பாரியும் பரிசிலர் இரப்பின் – பறம்பில்லையாயின் நீயே வேண்டுமென்று பாரியையும் பரிசிலர் இரப்பாராயின்
அறம் பூண்டு – தான் விரும்பும் கொடையறத்தை மேற்கொண்டு
வாரேன் என்னான் – வரமாட்டேன் என்று சொல்லாமல்
அவர் வரையன்- அவர் எல்லையில் நிற்பான்.
இப்பாடல் பாடாண்திணை ஆகும். பாடு + ஆண் + திணை. பாடுதற்குத் தகுதி உடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை.
துறை: இயன்மொழி. ‘பாரியும் அறம்பூண்டு பரிசிலர் இரப்பின் வாரேன் என்னான் அவர்வரை யன்’ என்பதிலிருந்து பாரியின் ஈகையியல்பு அறியப் படுவதால் இப்பாடல் இயன்மொழித் துறையாகும்.
விளக்கம்:
இப்பாடல் வேள் பாரி இறந்தபின் பாடப்பட்டது. குறத்தி எரித்தலாலுண்டாகிய சந்தனப் புகை வேங்கைப் பூஞ்சினைத் தவழும் என்றது, வேள் பாரி இரவலர்க்குக் கொடுத்தலால் உண்டாகிய நல்ல பெருமை முடிவேந்தர் மூவரின் புகழுக்கு மேல் ஓங்கி நின்றது அவர் பகைமை கொள்வதற்குக் காரணமாகியது என்பதாம். இதனை வெளிப்படை யாகக் கூறமுடியாமல் கபிலர் உள் வைத்து உரைத்தார்.
வேள் பாரியைப் போர் செய்து வெற்றி பெறுவது அரிது என்று உணர்ந்த தமிழ் வேந்தர், இரவலர் வடிவில் சென்று, அவனையே இரந்து நிற்க, அவன் இரவலர் இன்மை தீர்க்கும் நல்லறம் கொண்டு அவருடன் சென்று அவரால் கொலையுண்டான். மூவேந்தரும் பாரி போல அறம் பூணாது, பாரியைக் கொலை செய்து பழி ஏற்றனர்.

